நடிகர் சூரி இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு  ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


கடந்த 2009 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வெண்ணிலா கபடி குழு. இந்த படத்தை பார்த்தவர்களுக்கு படம் நியாபகம் இருக்குமோ இல்லையோ நிச்சயம் ஒரு காட்சியை மறக்கவே முடியாது. அதுதான் சூரி...புரோட்டா சூரியாக மாறிய தருணம். 50 புரோட்டா சாப்பிடும் போட்டியில் கடைக்காரர் ஏமாற்ற முயல, மறுபடியும் எல்லா கோட்டையும் அழிங்க..நான் ஃபர்ஸ்ட்ல இருந்து சாப்பிடுறேன் என அதகளம் பண்ணி தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார் சூரி. 






ஆனால் தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக், சந்தானம் ஆகிய முன்னணி நடிகர்கள் காமெடி காட்சிகளை ஆக்கிரமித்திருந்த நிலையில் ஆரம்பத்தில் கிடைக்கிற வேடங்களில் மட்டுமே அவர் நடித்து வந்தார். ஆனால் தன் முகம் மக்களிடத்தில் பரீட்சையமானால் போதும் என கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்தார். அதற்கு களவாணி திரைப்படம் கைக்கொடுத்த நிலையில், தொடர்ந்து வெளியான சுந்தர பாண்டியன், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், வெள்ளக்காரத்துரை, பாயும் புலி உள்ளிட்ட பல படங்கள் தனி காமெடியனாக அடையாளம் காட்டின. 






ரஜினி, விஜய், சூர்யா, அஜித், விக்ரம்,ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள சூரி, அதற்காக பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. தற்போது சிக்ஸ் பேக் தோற்றம், சினிமா தவிர்த்து ஹோட்டல் பிசினஸில் கலக்கி வருவது என வெற்றிப்பாதையை நோக்கி பயணித்து வருகிறார். வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் காமெடி களத்தில் பீக்கில் இல்லாதது சூரி என்னும் கலைஞனை முன்னணி நடிகராகி அவரது திறமையை வெளிப்படுத்தும் இடமாக அமைந்தது. இப்போது இயக்குநர் வெற்றி மாறனின் விடுதலைப் படத்தில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். 


ஆனால் முன்னரே சொன்னது போல சூரி பரோட்டா சூரியாக பிரபலம் ஆவதற்கு முன் பல படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார். ரகுமான் நடித்த சங்கமம், கார்த்திக் நடித்த கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளைப் போகுதே, அஜித் நடித்த ரெட், பிரசாந்த் நடித்த வின்னர், பரத் நடித்த காதல், அஜித் நடித்த ஜி, ஜெயம் ரவி நடித்த தீபாவளி, விக்ரம் நடித்த பீமா, பார்த்திபன், நடித்த ஜேம்ஸ் பாண்ட், பிரபுதேவா நடித்த நினைவிருக்கும் வரை ஆகிய படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருப்பார். இதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் பிரபலமான திருமதி செல்வம் சீரியலிலும் அவர் நடித்திருந்தார். 


ஆனால் அந்த சூரியை பார்த்தால் நிச்சயம் பலருக்கும் அடையாளம் தெரியாது. ஆனால் இன்றைய சூரியை அடையாளம் தெரியாமல் எவராலும் இருக்க முடியாது. அவரின் வளர்ச்சி அத்தகையது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சூரி...!