தமிழில் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் சோனாலி. பாலிவுட்டில் முன்னனி நடிகரான இவர் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்தவர். மேலும் பல பாலிவுட் ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராகப் பங்கேற்று வந்தார். இதற்கிடையே இவர் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்குத் தீவிர புற்றுநோய் தொற்று ஏற்பட்டிருப்பதைப் பற்றிப் பகிர்ந்திருந்தார்.
இன்று புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் தான் புற்றுநோயிலிருந்து மீண்டது குறித்துப் பகிர்ந்திருந்தார் அவர். அதில்,’காலம் எத்தனை வேகமாகக் கடக்கிறது. திரும்பிப்பார்க்கும்போது அதில் வலிமையைப் பார்க்கிறேன், வீழ்ச்சியைப் பார்க்கிறேன். மிக முக்கியமாக புற்றுநோய் எனது வாழ்க்கையை முடிவு செய்யக்கூடாது என்பதில் எனக்கிருந்த உறுதியைப் பார்க்கிறேன். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையை நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள்.அதில் நீங்கள் உருவாக்குவதுதான் பயணம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்க நினைவுகொள்ளுங்கள்.சூரியன் போலப் பிரகாசியுங்கள்’எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
2018-ஆம் ஆண்டில் தனக்கு புற்றுநோய் வந்ததை அடுத்து அதற்கு தான் எடுத்துக்கொண்ட சிகிச்சை குறித்தும், அதிலிருந்து தான் மீளத் தனக்கு பக்கபலமாக இருந்த தனது கணவர், மகன் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்கள் குறித்துப் பகிர்ந்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் தன் சிகிச்சைக்கான காலத்தில் ‘சோனாலி புக் கிளப்’ என்கிற குழுவைத் தொடங்கிப் பல்வேறு சுவாரசியமான புத்தகங்களைக் குறித்த ரிவ்யூக்களைத் தந்தார். பல்வேறு சர்வதேச எழுத்தாளர்களைப் பேட்டி எடுத்தார். யோகா, இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை என தனது வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொண்டார். மேலும் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு, குழந்தைகளில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு என புற்றுநோய் விழிப்புணர்வு சார்ந்த செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.