மார்க் ஆண்டனி படத்தின் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள கதாபாத்திரத்தின் தோற்றம் என்ன என்பதை படக்குழு வெளியிட்டுள்ளது. 






தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஷால் நடிப்பில் கடைசியாக எனிமி, வீரமே வாகை சூடும் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர்களும், விஷாலின் நெருங்கிய நண்பர்களுமான ரமணா, நந்தா ஆகியோர் இணைந்து ரமணா புரொடக்‌ஷன்ஸ் பேனரில்  'லத்தி' என்ற படத்தை தயாரித்து வருகின்றனர். அதில் நடித்து வரும் விஷால்,  த்ரிஷா இல்லானா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன், அசராதவன், பொய்க்கால் குதிரை ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். 


ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு மார்க் ஆண்டனி என பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை ரிது வர்மா கதாநாயகியாக நடிக்க,  எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் மார்க் ஆண்டனி படத்தை தயாரிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஷாலுக்கு கால் முட்டியில் பலத்த அடிபட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.






தொடர்ந்து விஷாலின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மார்க் ஆண்டனி படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. கைதி படத்தை கார்த்தியை நியாபகப்படுத்தும் வகையில் விஷாலின் லுக் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள கதாபாத்திரத்தின் தோற்றம் குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது. ஜாக்கி பாண்டியன் என இந்த கேரக்டருக்கு பெயரிடப்பட்டுள்ளது.