அரிசி சாதத்திற்கு ஏங்கி கஷ்டப்பட்டவன் நான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவரைவிடவும் கஷ்டப்பட்டவன் என்று நடிகர் சிவக்குமார் பேசினார்.


சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜெய்பீம். விமர்சன ரீதியகா சர்வதேச அளவில் வரவேற்பை இத்திரைப்படம் பெற்றுள்ளது. ஓடிடி தளத்தில் வெளியானாலும் கூட உலகம் முழுவதும் இருந்து பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் அண்மையில் நடிகர் சிவக்குமார் ஜெய்பீம் பாராட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி மிகவும் நெகிழ்ச்சி பொங்க நினைவு கூர்ந்தார்.




சிவக்குமார் பேசியதாவது:


”ஜெய்பீம் என்றொரு சிறந்த படத்தை ஞானவேல் இயக்கியிருக்கிறார். இனி அவரே நினைத்தாலும் கூட இப்படியொரு படத்தை இயக்க முடியுமா என்று தெரியவில்லை.


இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிற எல்லாரை காட்டிலும் மிகவும் வறுமையில் வளர்ந்தவன் நான். இன்று எனது குடும்பத்தினர் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று மதிய சாப்பாட்டை சாப்பிட்டால் 15,000 ரூபாய் செலவாகிகிறது. ஆனால் அந்தக் காலத்தில் நான் ஒரு வேளை அரிசி சாதத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். அரிசி சோறு பொங்கிப் போட முடியலைன்னா ஏன் பெத்த என்று எங்கம்மாவ கோபமா பேசியிருக்கிறேன். எங்கம்மா வாய் திறந்து ஒருநாளும் பேசினது இல்ல. எளிமையான மனுஷி. நான் கேட்ட கேள்விக்காக எங்கம்மா வெறும் கேப்பைக்கூழா சாப்பிட்டு உழைத்து என்னை வளர்த்தார். என்னை படிக்க வைத்தார். நான் சென்னையில் படிச்சேன். ஏழு ஆண்டுகள் ஓவியம் வரைந்து ஊர் ஊராகத் திரிந்து நான் 7 ஆண்டுகளில் சம்பாதித்த பணம் வெறும் 7 ஆயிரம்தான். ஏழு ஆண்டுகள் 15 ரூபாய் வாடகை அறையில் வாழ்ந்தேன். அந்த வீட்டில் இருந்தே என் உயரம் இவ்வளவு குறைவாகிவிட்டது,


ஜெய்பீம் படக்குழுவினர் இங்கு வந்திருக்கின்றனர், அந்த திரைப்படத்தில் உயர் நீதிமன்றத்தை போலவே அச்சு அசலாக உருவாக்கிய கலை இயக்குநர் கதிர் இவர்தான். 


கதிர் உருவாக்கிய அந்த நீதிமன்றம் செட் இன்று உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறது.  ஒரிஜினல் ஹைகோர்ட்க்கும் அந்த படத்தில் வரும் கோர்ட்டுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாத அளவிற்கு செட்டு அமைத்துள்ளார். 




அதேபோல இங்கே இயக்குநர் தா.செ.ஞானவேல் வந்திருக்கிறார். இவன் எனக்கு இன்னொரு மகன், ஞானவேலை இவன் என்றுதான் நான் சொல்லமுடியும், அவர் என்று நான் கூப்பிட முடியாது. ஏனென்றால் எனக்கு இன்னொரு மகன் ஞானவேல். அவன் முதலில் ஒரு படம் எடுத்தான், அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படமெடுக்க நீ லாயக்கு கிடையாது என பேனாவை பிடுங்கிக்கொண்டு விரட்டி விட்டேன். அப்புறம் அவனுக்கு ரோசம் வந்திருச்சு.  


துணிந்து இந்தப் படத்தை எடுத்துள்ளான்.  ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி ஒரு படம் எடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு உணர்ச்சிவயப்பட்டு ஒவ்வொரு பழங்குடியின மக்களுக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அவர்களின் தேவைகளை உடனே செய்து கொடுக்கும்படி அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு போட வைத்திருக்கிறது இந்த படம். ஒடுக்கப்பட்ட இனத்திற்கு பட்டா கொடுக்க சொல்லி உத்தரவு போட வைத்திருக்கிறது இந்தப் படம்”
இவ்வாறு சிவக்குமார் உருக்கமாக பேசியுள்ளார்.