சூர்யா தயாரிப்பில் , அருண் விஜய் நடிப்பில் வருகிற 21 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஓ மை டாக். இந்த படத்தில் அருண் விஜயுடன் அவரது தந்தை விஜயகுமாரும் , மகன் ஆர்ணவும் இணைந்து நடித்துள்ளனர். மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்திருக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2 டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவக்குமார், தனது மகன் குறித்து நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
சிவக்குமார் பகிர்ந்ததாவது:
"எனக்கு என்ன வேடிக்கையா இருக்குன்னா ...போன வருஷம் ஜெய் பீம்னு ஒரு படம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு படத்தை பார்த்துவிட்டு , தமிழக அரசு இருளர் என்னும் பழங்குடி மக்கள் எவ்வளவு பேர் இருக்காங்கன்னு கணக்கு பார்த்து, அவங்களுக்கு பட்டா கொடுத்து, ரேஷன் கார்ட் கொடுத்ததெல்லாம் தமிழக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை .யாருமே படம் எடுக்கும் போது இப்படியான வரவேற்பு வரும் என நினைக்கவில்லை. அதே பொல சூர்யா நீதிபதி சந்துருவாக நடித்தது இன்னும் பெரிய விஷயமா பார்க்குறேன். என்னுடைய பார்வையில சூர்யாவின் வேறு எந்தவொரு திரைப்படத்திற்கும் இப்படியான வரவேற்பு கிடைத்ததே கிடையாது. எனக்கும் , எனது மனைவிக்கும் எப்போதுமே சூர்யாவை நினைத்து கவலையாக இருக்கும். ஏன்னா நாம நாலு வார்த்தை பேசினா அவர் ஒரு வார்த்தைதான் பேசுவான்.
அவன் பள்ளிக்காலங்கள்ல கூட கேள்வியை எதிர்கொள்ள பயந்தவன்.நான் சூர்யாவுக்கு கல்லூரியில சேர்த்த பொழுது , ஏன் சார் ஒரு சீட்டை வேஸ்ட் பண்ணுறீங்கன்னு கேட்டாங்க. ஏன் சார் என கேட்ட பொழுது சினிமாக்காரர்களின் மகன்கள் யாருமே டிகிரி வாங்கியது கிடையாது சார் அப்படினு சொன்னாங்க.அந்த சமயத்தில் நான் ஹீரோவாக நடித்து உச்சத்தில் இருந்தேன். சூர்யா கல்லூரியில் அடுத்தடுத்த ஆண்டு முன்னேறும் பொழுது அரியர்ஸும் அதிகமாகிக்கொண்டே சென்றது. கஷ்டப்பட்டி டிகிரி வாங்கினான். எம்.காம் படினு சொன்னேன் , நான் வீட்டை விட்டு ஓடிப்போயிடுவேன்னு சொல்லிட்டான்.
துறைமுகத்துக்கு போய் வேலை செய்தான், திருப்பூர்ல ஏதாவது எக்ஸ்போர்ட் பண்ணலாம்னு முடிவு செய்து வைத்திருந்த பையன் , காலங்கள் மாறி வசந்த் என்னிடம் கேட்டாரு , உங்க பையனை நடிக்க வைக்குறீங்களானு, நான் சொன்னேன் அவன் பேசவே மாட்டான் . நடிப்பு ஒன்னுமே தெரியாது அப்படினு சொன்னேன். அப்படியான ஆள்தான் சார் வேண்டும் ராவா இருந்தாதான் சார் சரியாருக்கும், முன்னதாக எதுவும் தெரிந்திருந்தால் கஷ்டம்னு சொன்னாரு. முதல் இரண்டு படம் பண்ணி ஊத்திக்கிச்சு . அந்த பையனுக்கு பாலானு ஒருத்தர் வந்து வேற இடத்துக்கு கொண்டு போனார். அந்த பையன் இன்னைக்கு இப்படி ஒரு படம் பண்ணியிருக்கான், 2டி அப்படினு ஒரு தயாரிப்பு நிறுவனம் வச்சிருக்கான்னு நினைக்குறப்போ பெருமையா இருக்கு . “ என மகனை மேடையில் பெருமைபட பேசியிருக்கிறார் சிவக்குமார்.