மாவீரன்


மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் மாவீரன். அதிதி ஷங்கர் , மிஸ்கின் , சரிதா , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். மண்டேலா படத்தின் மூலம் கவனமீர்த்த மடோன் அஸ்வின் தனது இரண்டாவது படத்தில் வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ஒன்றை வழங்கியிருந்தார்.

Continues below advertisement


தமிழில் வெளியான நல்ல சூப்பர் ஹீரோ படங்களில் மாவீரன் படமும் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. இன்றுடன் மாவீரன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அதிகாலை தொடங்கி படத்தை பற்றி நிறை விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் மாவீரன் 2 படம் பற்றிய அப்டேட்களையும் கேட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் மாவீரன் படம் உருவான விதம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


மாவீரன் உருவான விதம்


தனது எக்ஸ் பக்கத்தில் சிவகார்த்திகேயன் இப்படி கூறியுள்ளார். “தயாரிப்பாளர் அருண் விஸ்வா என்னிடம் ஒருமுறை மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தின் ட்ர்ய்லரை வெளியிட கேட்டுக்கொண்டார். மண்டேலா படத்தின் ட்ரெய்லரை பார்த்த நான் ஆச்சரியமடைந்து விட்டேன். “யார் இந்த இயக்குநர்? ரொம்ப சுவாரஸ்யமான ஆளாக இருக்கிறாரே” என்று நான் அருண் விஸ்வாவிடம் சொன்னேன். மண்டேலா படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.


மடோன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஏதாவது படத்திற்கான ஐடியா இருக்கிறாதா என்று கேட்டேன். சில நாட்களில் மடோன் அஸ்வின் மாவீரன் படத்தின் கதையை சொன்னார். இந்தப் படத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல் உங்கள் வழியில் எடுத்து முடிப்போம் என்று சொன்னேன். அருண் விஸ்வா படத்தை தயாரித்தார் . எராளமானவர்கள் இந்தப் படத்திற்கு உயிர் கொடுக்க கடுமையாக உழைத்தார்கள். ஒரு வருடத்துக்குப் பிறகு இந்தப் படத்தை இன்னும் கொண்டாடுகிறார்கள். இதற்கான எல்லா பாராட்டுக்களும் இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் தயாரிப்பாளர் அருணை சேரும். இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்த என்னுடைய தம்பி, தங்கைகள் மற்றும் எல்லா ரசிகர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.