சிவகார்த்திகேயன்


சினிமாத் துறையில் கடந்த 13 ஆண்டுகளாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் இன்று முன்னணி  நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன் . கடைசியாக அவர் நடித்த அமரன் திரைப்படம் உலகளவில் 350 கோடி வசை வசூல் செய்துள்ளது.  அமரன் படத்தின் பான் இந்திய வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர் மூருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே 23 படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்தபடியாக இந்தி திரைத்துறையில் சிவகார்த்திகேயன் களமிறங்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இது குறித்து ஹாலிவுட் ரிப்போர்டர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஒப்பனாக பேசியுள்ளார் எஸ்.கே


ஆமீர் கான் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் 


" இந்தியில் ஒரு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தது உண்மை தான். ஆனால் எல்லா கதைகளும் படமாகிவிடுவதில்லை. சமீபத்தில் நடிகர் ஆமீர் கானை சில முறை சந்தித்தேன். நான் பாலிவுட்டில் நடிக்கும் முதல் படத்தை ஆமீர் கானின் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கும் என அவர் என்னிடம் சொன்னார். ஏதாவது நல்ல கதை இருந்தால் அதை கொண்டு வரும் படி சொல்லி இருக்கிறார். எனக்கு இங்கு சில கமிட்மெண்ட் இருக்கிறது அதை எல்லாம் முடித்துவிட்டு நல்ல கதை வரும் போது நான் வருகிறேன் என்று அவரிடம் சொல்லி இருக்கிறேன்" என சிவகார்த்திகேயன் பதிலளித்தார். 


எஸ்.கே 23 பற்றி சிவகார்த்திகேயன் 


முருகதாஸ் இயக்கும் எஸ்.கே 23 படம் குறித்து பேசியபோது " இது ஒரு ஆக்‌ஷன் என்டர்டெயினர் படம். ருக்மினி வசந்த , பிஜூ மேனன் , விக்ராந்த் , ஷபீர் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். ஐயப்பனும் கோஷியும் படத்தின் ஒளிப்பதிவாளர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்வது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது. கிட்டதட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் 7 முதல் 8 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. தற்போது முருகதாஸ் சல்மான் கான் படத்தை இயக்கி வருகிறார். அவர் அதை முடித்துவிட்டு திரும்பும் போது எங்கள் படப்பிடிப்பு தொடரும். டப்பிங் வேலைகள் இன்னொரு பக்கம் நடந்து வருகின்றன. அடுத்தடுத்து ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடுவது குறித்து முடிவெடுக்க இருக்கிறோம். இந்த படத்தின் டைட்டிலை தெரிந்துகொள்ள நான் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். முருகதாஸ் மனதில் மூன்று டைட்டில் இருக்கின்றன. அதில் அவர் எதை தேர்வு செய்கிறார் என்று தெரியவில்லை. வழக்கமான கமர்ஷியல் படமாக இல்லாமல் நல்ல கதாபாத்திரங்கள் அவர்களை மையப்படுத்திய ஆக்‌ஷன் கதையாக இந்த படம் இருக்கும் " என அவர் தெரிவித்தார்.