வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார். 


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் கடந்த 4ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை புரட்டி போட்டது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றும், அதிகனமழை ஆதிக்கம் செலுத்தி சென்னையை உண்டு இல்லை என்று ஆகியது. கடந்த  40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்ததால் சென்னை மாநகரமும், மக்களும் ஸ்தம்பித்து போகின. எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவித்து சாலைகளில் இறங்கி போராட்டம் செய்யும் அளவிற்கு இந்த புயல் நம்மை போட்டு புரட்டியது. அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டனர். தற்போதுதான் மழையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.


ஆனாலும் ஒரு சில பகுதிகளில் இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  சென்னையை ஒட்டுமொத்தமாக வெள்ளம் புரட்டி போட்டதில் அரசும், மக்களும் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டதில் உயிர்ச் சேதம் என்பது பெருமளவு தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், தற்போதுவரை வடசென்னை மற்றும் வேளச்சேரி பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. 


குறிப்பாக, மிக்ஜாம் புயலால் கனமழை கொட்டியதில்  திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறியது. மேலும், பாசனக் கால்வாய்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்த நிலையில், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கின. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.


இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஏதுவாக பலரும் தங்களால் இயன்ற உதவிகளை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர். முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட நிவாரணம் அளிக்கும் வகையில் தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக அளித்தார். மேலும், தன்னைப்போல் மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 






அந்தவகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரடியாக சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். இந்த செய்தியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் – இயக்கங்கள் - தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நம்மை சந்தித்த போது, நடிகர் – சகோதரர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் - நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் - இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்!” என பதிவிட்டுள்ளார்.