அயலான் படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் சமூக வலைத்தளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர். 


தமிழ் சினிமாவில் பேமிலி ஆடியன்ஸின் பேவரைட் நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு டான், பிரின்ஸ்  படங்கள் வெளியானது. இதில் டான் படம் ரூ.100 கோடி வசூலை கடந்த நிலையில், பிரின்ஸ் படம் படுதோல்வியடைந்தது. இதனால் தனது அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக சிவகார்த்திகேயன் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் மாவீரன், அயலான் படங்கள் வெளியாக உள்ளது.  


தீவிர எதிர்பார்ப்பில் அயலான்


இதனிடையே கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் அயலான் படத்தை  நேற்று இன்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் தான் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங்,  சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன்  என பலரும் நடித்துள்ளனர். அயலான் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் நிலையில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 


ஆனால் நீண்ட நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கதைப்படி வேற்றுக்கிரக வாசிகள் இடம் பெறும் காட்சிகளுக்கான கிராஃபிக்ஸ் பணிகள் தரமானதாக உருவாவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இப்படம் முதலில் கடந்தாண்டு டிசம்பருக்கு படம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அப்டேட் கொடுத்த அயலான் டீம்


இந்நிலையில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பில், ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எங்களின் பிரமாண்ட படைப்பான 'அயலான் ' பற்றிய புதிய அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.


இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளைத் தாண்டி, நாளை ஏப்ரல் 24, காலை 11.04 மணிக்கு 'அயலான் 'அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அயலான் ' திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின்  CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கலுடன் பணி புரிந்துள்ளோம்.  அயலான்,  ஒரு பான்-இந்தியன் திரைப்படம் என்பதால்  அதிக எண்ணிக்கையிலான CGI  காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது.


உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக  அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். நாளைய 'அயலான் ' அப்டேட் நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும். இந்த படம் மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.