அ.தி.மு.க. தரப்பு வேட்பாளர் என்று குறிப்பிட்டு மனு தாக்கல் செய்துள்ளது குறித்து கர்நாடக தேர்தல் ஆணையம் ஓ. பன்னீர்செல்வம் தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


கர்நாடக தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ். புகார் அளித்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காந்திநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஓ.பன்னீசெல்வம் தரப்பின் மனு ஏற்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் திருப்திகரமான விளக்கம் இல்லையெனில் வேட்பாளர் குமாருக்கு எதிராக வழக்கு பதிவு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள், வரும் மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.


தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. கர்நாடகாவை பொறுத்தவரையில் மூன்று முக்கிய கட்சிகள் உள்ளன. ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பழைய மைசூரு பகுதியில் செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம். பொதுவாக, இந்த மூன்று அரசியல் கட்சிகளை சுற்றிதான் அரசியல் நகர்வு மேற்கொள்ளப்படும்.


ஆனால், அதையும் தாண்டி தமிழ்நாட்டில் உள்ள ஒரு கட்சியும் கர்நாடக தேர்தலில் பொதுவாக அதிக கவனம் செலுத்துவது வழக்கம். தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் என்பதால் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதன் காரணமாகவே, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிமுக பல ஆண்டுகளாக போட்டியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த முறை கர்நாடக தேர்தலில் களம் காண தயாராகி வருகிறது அதிமுக. 


வேட்பாளர்கள்


அதன்படி, பெங்களூரு புலிகேசி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அன்பரசன் போட்டியிடுவதாக அறிவித்தார். இவர் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவராக உள்ள நிலையில் அன்பழகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து, அன்பரசன் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்தார்.


எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தமிழகர்கள் அதிகம் வசிக்கும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, புலிசேகி நகர் தொகுதியின் வேட்பாளராக நெடுஞ்செழியன், காந்தி நகர் தொகுதியில் கே.குமார், கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜா என்பவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் மூவரும் அந்தந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனுக்களை நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர். 


ஓபிஎஸ் மனுக்கள் ஏற்பு


நேற்று முன்தினம் மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்கள் 2 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதன்படி, கோலார் தங்கவயலில் அனந்தராஜ், காந்தி நகரில் கே.குமார் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.


அதேபோல, கர்நாடக புலிகேசி நகரில் போட்டிட வேட்புமனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர் அன்பரசனின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 


அதிமுக கடிதம்


இந்நிலையில், ஓபிஎஸ் அணி வேட்பாளர்களை அதிமுக வேட்பாளர்களாக ஏற்றுக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக தரப்பில கடிதம் எழுதப்பட்டுள்ளது. கடிதத்தில் இருப்பதாவது, "கர்நாடகாவில் புலிகேசி நகரில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் மனுக்களை ஏற்றுள்ளனர். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.