இந்தியாவின் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் நேற்று வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அவரது மறைவு இந்திய மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்தனர்.
லதா மங்கேஷ்கர் மறைவிற்கு மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் குடும்பத்தினர் மிகுந்த வேதனையை பதிவு செய்துள்ளனர். நடிகர் சிவாஜி லதா மங்கேஷ்கர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். லதா மங்கேஷ்கரை தன்னுடைய சொந்த தங்கை போலவே சிவாஜி கணேசன் கவனித்துக்கொள்வாராம். லதா மங்கேஷ்கர் தங்குவதற்காகவே சிவாஜி கணேசன தனது வீட்டில் ஒரு தனி தங்கும் வீட்டை ( அவுட் ஹவுஸ்) ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீடு வெறும் 2 மாதத்திலே கட்டப்பட்டுள்ளது. மேலும், சிவாஜிகணேசன் – லதா மங்கேஷ்கர் அண்ணன் – தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக சிவாஜி லதா மங்கேஷ்கருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமாகிய நடிகர் விக்ரம் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் லதா மங்கேஷ்கரின் இழப்பால் எங்களது குடும்பம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வேதனை அடைந்துள்ளோம் என்று பதிவிட்டுள்ளார். லதா மங்கேஷ்கர் 1929-ஆம் ஆண்டு பிறந்தவர், தனது பதின்ம பருவம் முதல் பாடி வரும் லதாமங்கேஷ்கர் தமிழில் இளையராஜாவின் இசையில் மூன்று பாடல்களை நேரடி தமிழ்படத்திற்காக பாடியுள்ளார்.
அவற்றில் அவர் பாடிய வளையோசை பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக, 1953ம் ஆண்டும், 1955ம் ஆண்டும் இந்தியில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்ட படத்தில் இடம்பெற்ற பாடல்களை தமிழில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் நேற்று மும்பையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்