மகாராஜா படம் பார்த்த பிறகு என் மனைவி என்னை வீட்டில் சேர்த்துக்கொள்வார்களா என தெரியவில்லை என நடிகர் சிங்கம்புலி தெரிவித்துள்ளார்.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன் தாஸ், அபிராமி, அனுராக் காஷ்யப், நட்டி, சிங்கம் புலி, அருள் தாஸ், பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “மகாராஜா”. அஜனீஷ் லோகநாதன் இசையமைத்துள்ள இப்படம் விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இந்த படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. திரையிட்ட முதல் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜா படம் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றுள்ளது.
இதனிடையே இந்த படத்தில் வில்லனாகவும், பாலியல் இச்சை கொண்ட நபராகவும் சிங்கம் புலி நடித்துள்ளார். இதுவரை காமெடி கேரக்டரில் நடித்து வந்த அவர் இப்படி ஒரு கேரக்டரில் நடித்திருப்பதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சிங்கம் புலி, மகாராஜா படத்தில் நடித்தது பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில், “நான் புனேவில் இருக்கும் போது நித்திலன் சாமிநாதன் கதை சொன்னார். நான் 2 நாட்கள் டைம் கேட்டேன். ஆனால் ஒருவாரம் ஆகியும் பதில் சொல்லவில்லை. விஜய் சேதுபதியும் என்னிடம் படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டார். 10 நாட்கள் கழித்து தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த அளவுக்கு மகாராஜா படம் ரீச் ஆகும் என நான் எதிர்பார்க்கவில்லை. முன்னாடி எல்லாம் காமெடியாக என்னை பார்த்தார்கள். ஆனால் காலம் என்னை மாற்றி விட்டது. வில்லனாக நடித்திருக்கிறேன்.
மகாராஜா படத்தை இன்னும் என் மனைவி பார்க்கவில்லை. அதன்பிறகு அவர் என்னுடன் இருப்பாரா என தெரியவில்லை. வீட்டில் இருக்க விடுவாரா என்பது சந்தேகம் தான். ஒரு இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வந்தால் நான் கேட்கிற எல்லா சலுகையும் தருவார்கள். ஆனால் என்னை வழுக்கை தலையுடன் தான் நடிக்க வேண்டும் என கண்டிஷன் போடுவார்கள். அது என்னுடைய அடையாளமாக மாறிவிட்டது. முடி இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் ஒரு வாழ்க்கை என்பது இங்கு இருக்கிறது. மிகப்பெரிய வெற்றியாளர்கள் பக்கத்தில் எல்லாம் வழுக்கை தலையுடன் ஒரு நபர் இருப்பார். உதாரணமாக காந்தியும், நேருவும் எடுத்துக்கொள்ளலாம். நன்றாக இருக்கிறது என மக்கள் நினைக்கும் வரை நான் இப்படியே நடிப்பேன்” என தெரிவித்துள்ளார்.