இயக்குநரும், நடிகருமான சிங்கம்புலி கடைசியாக 'கடைசி உலக போர்' படத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி நடிப்பில் வந்த மகாராஜா படத்திலும், எதிர்மறை ரோலில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருப்பார். இந்தப் படத்தில் அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.


நடிகர் என்பதை தாண்டி, இயக்குனராகவும் அறியப்படும் சிங்கம்புலி அஜித்தை வைத்து ரெட் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர். இந்த படத்தின் கதை மட்டுமின்றி பாடல்களும் ரசிகர்களை கொண்டாட வைத்தது. அதன் பிறகு சூர்யாவை வைத்து இவர் இயக்கிய மாயாவி தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து படங்கள் இயக்கவில்லை. உனக்காக எல்லாம் உனக்காக, ராஜா, ஆஞ்சநேயா ஆகிய படங்களில் உதவி இயக்குநராகவும் சிங்கம்புலி பணியாற்றியிருக்கிறார்.


நடிகர் மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து தற்போது அசத்தி வருகிறார். டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியிருக்கிறார். இவ்வளவு ஏன் கடந்த ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு என்ற சமையல் தொடர்பான ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு சமையலிலும் வித்தகராக ஜொலித்தார்.


இப்படி பன்முக கலைஞரான சிங்கம்புலி தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஓ பன்னீர்செல்வத்தின் நெருங்கிய உறவினர் என்று தெரியவந்துள்ளது. சிங்கம்புலிக்கு ஓபிஎஸ் மாமா முறையாம். சிங்கம்புலி தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர். ஓபிஎஸ்ஸூம் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பது குறிபிடத்தக்கது.