தமிழ் சினிமாவில் தன்னுடைய படைப்புகள் மூலம் அறியப்படும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் நித்திலன் சாமிநாதன். விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்த 'குரங்கு பொம்மை' திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் இயக்கிய படம் 'மகாராஜா'. லீட் ரோலில் நடித்த நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படம். அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி கிளப்பில் இணைந்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ஓடிடியில் வெளியான பிறகும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது 'மகாராஜா' திரைப்படம்.
இந்நிலையில் 'மகாராஜா' படத்தை பார்த்த நடிகர் சிம்பு, படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த அற்புதமான சந்திப்பு குறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார் இயக்குநர் நித்திலன் சாமிநாதன். "இந்த அற்புதமான சந்திப்புக்கு நன்றி. மகாராஜாவை பற்றியும் சினிமாவைப் பற்றியும் உங்களுடன் ஆழமாக விவாதித்தது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நீங்கள் மிகவும் எதார்த்தமாக, வெளிப்படையாக, எளிமையாக இருந்தீர்கள். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி" என பதித்து இருந்தார்.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் அடுத்ததாக நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாராவை வைத்து இரு வேறு படங்களை எடுக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
மணிரத்னம் - கமல்ஹாசன் காம்போவில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தில் நடிகர் சிம்புவை காண அவரின் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இது தவிர மலையாளப் படமான '2018' மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.