தமிழ்ந் திரையுலகில் பாலியல் தொடர்பான புகார் இதுவரை வரவில்லை என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் “தமிழ் திரையுலகில் இதுவரை பாலியல் தொடர்பான புகார்கள் வரவில்லை. அவ்வாறு பாலியல் புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். 


முன்னதாக மலையாளத் திரையுலகில் வாய்ப்பு தேடி செல்லும் இளம் நடிகைகளுக்கு பாலியல் தொடர்பாக அழுத்தம் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதில் பல முன்னணி நடிகர்கள் பெயர்களும் அடிபட்டுள்ளன. இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய செய்தி மோலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


இதைத்தொடர்ந்து தற்போது தமிழ் திரையுலகிலும் பாலியல் தொடர்பான அழுத்தம் இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே விளக்கம் அளித்த நடிகர் விஷால் “தமிழ்நாட்டில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. அவரவர்கள் பொறுப்பில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். நடிகைகள் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பாளர்கள் வைத்துள்ளார்கள்.


20% தான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய அலுவலகங்களில் ஏமாற்றம் அடைகிறார்கள். யாராவது அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு கூப்பிட்டால் அவர்களை அந்த பெண் செருப்பால் அடிக்க வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும். சில கம்பெனிகள் பெண்களை போட்டோஷுட் எடுத்துவிட்டு பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை. இதுகுறித்து புகார் அளித்தால் கண்டிப்பாக நடிக்கவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.