'மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து, படத்தின் கதாநாயகன் சிம்பு படக்குழுவினர் 300 பேருக்கு வாட்ச் பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார்.


சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதுமே, சிம்பு நேரத்திற்கு வந்து நடித்து கொடுக்கமாட்டார் என்று சொல்லப்பட்டது. அதுபோலவே, சிம்புவும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தார். ரசிகர்களும் சிம்பு ஏன் இப்படி ஒரு நல்ல படத்தில் நடிக்காமல், காலம் தாழ்த்துகிறார் என்று புலம்பினார்கள். சிம்பு நடிப்பார் என்று நம்பிக்கையோடு இருந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்து, ‘மாநாடு’ படம் கைவிடப்பட்டதாக நொந்துபோய் அறிவித்தார். அதன்பிறகு, உடம்பை குறைத்து வந்த சிம்பு, ‘மாநாடு’ படம் மீண்டும் தொடக்கம் என அறிவிப்பால், மீண்டும் சூடிபிடிக்க தொடங்கியது மாநாடு படம் குறித்த பேச்சுக்கள்.


யாரும் எதிர்பாராத வகையில், சரியான நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டு ‘மாநாடு’ படத்தில் நடித்து வந்தார். கொரோனாவால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றது. சிம்புவும் வேகமாகவும் செயல்பட்டு படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.


இந்நிலையில், ‘மாநாடு’ திரைப்படத்தின் நேற்று நிறைவடைந்ததாக தயாரிப்பாளர் காமாட்சி அறிவித்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், வெங்கட் பிரபு, சிம்பு மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டிய புகைப்படத்தையும் வெளியிட்டார். அத்துடன் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி கூறினார்.






 


இதனைத்தொடர்ந்து, படத்தின் கதாநாயகன் சிம்பு படக்குழுவினர் 300 பேருக்கு வாட்ச் பரிசாக கொடுத்து அசத்தினார். வாட்ச் வழங்கியதற்கு சிம்புவுக்கும், தனது மாநாடு குழுவுக்கும் நன்றி கூறிய இயக்குநர் வெங்கட் பிரபு, விரைவில் அப்துல் காலிக்கை பார்ப்பீர்கள் என்று ட்வீட் செய்தார்.






 


அரசியல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷினி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


அண்மையில், இந்தப் படத்தில் இருந்து ‘மெஹ்ரசைலா’ பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் மற்ற பாடல்களையும் கேட்க ஆவலுடன் இருக்கின்றனர் ரசிகர்கள்.