பத்து தல படத்துக்குப் பிறகு நடிகர் சிம்பு கமல்ஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


சிம்புவின் அடுத்த படம்


மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் நடிப்பில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வரும் சிம்பு நடிப்பில் அடுத்ததாக பத்து தல படம் வெளியாக உள்ளது.


வரும் மார்ச் 30ஆம் தேதி பத்து தல படம் உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சில்லுனு ஒரு காதல்,  நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.  வரும் மார்ச் 18ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ளது.


பத்து தல படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிக்க உள்ள படம் குறித்து வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. சென்ற ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்த பாகம் இந்த ஆண்டு வெளியாகும் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.


100 கோடி பட்ஜெட்


இந்நிலையில், சிம்புவின் அடுத்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


அதன்படி சிம்பு அடுத்தாக நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்க உள்ளதாகவும், 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட பீரியட் படமாக இப்படம் உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உதயநிதி ஸ்டாலினை வைத்து அடுத்த படம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது.


ஆனால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் மாமன்னன் படம் தான் தன் கடைசி படம் என ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.


இந்நிலையில்,  இந்தப் படம் நிச்சயம் தொடங்கப்படப்போவதில்லை எனும் சூழலில் தற்போது சிம்புவின் அடுத்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


சிம்பு - ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனம்


முன்னதாக நடிகர் கமல் விக்ரம் பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தபோது நடிகர் சிம்பு, கமலுக்கு பதிலாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான பிக் பாஸ் 24x7 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி உதவினார். இதனைத் தொடர்ந்து சென்ற ஆண்டு நடைபெற்ற வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்புவின் மீதான தன் அன்பை வெளிப்படுத்தும் வகையில், கமல்ஹாசன் கலந்துகொண்டார்.


ஏற்கெனவே தன் கலையுலக குருவாக சிம்பு கமலை ஏற்று அவரது பெரும் ரசிகராக வலம் வந்த நிலையில், இந்த நிகழ்வுக்குப் பின் இருவரது நட்புறவு மேலும் உறுதியானது.


சிகப்பு ரோஜாக்கள் 2?


இந்நிலையில் இந்த நட்பின் நீட்சியாக ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனமும் சிம்புவும் இந்தப் படத்தில் கைகோர்ப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மன்மதன் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் சிம்பு சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


1978இல் வெளியான கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான ’சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகமான ’சிகப்பு ரோஜாக்கள் 2’ படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும், இந்தப் படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்க உள்ளதாகவும் 2020ஆம் ஆண்டு தகவல் வெளியானது. ஆனால் அதன் பிறகு அது குறித்து பேசப்படாத நிலையில், சிம்பு - ராஜ் கமல் நிறுவனம் கைகோர்க்கும் இந்தப் படம் சிகப்பு ரோஜாக்கள் 2வாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.