வாழ்க்கைஜ்யில் நாம் ஒழுங்காக, நிம்மதியாக இருப்பது தான் முக்கியம் என நடிகர் சிலம்பரசன் டிஆர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் சிலம்பரசன் டிஆர். லிட்டில் சூப்பர் ஸ்டாராக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டுள்ளார். நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட சிலம்பரசன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட 2வது தமிழ் திரைப்பட பிரபலமாவார்.
இப்படியான நிலையில் சிலம்பரசன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் மலேசியா சென்றிருந்தார். சமீபத்தில் மலேசியா சென்ற சிலம்பரசன் அங்கு தன்னுடைய ஆஸ்தான நடிகரான அஜித்தை சந்தித்து உரையாடினார். அஜித் தற்போது கார் ரேஸ் போட்டிக்காக மலேசியாவில் உள்ளார். அஜித் அணியின் ஜெர்ஸியை அணிந்துக் கொண்டு இருவரும் சந்தித்த புகைப்படம், வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது.
ரொம்ப அடி வாங்கியிருக்கிறேன்
இதனைத் தொடர்ச்சி தன்னுடைய நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலம்பரசன், அங்கு தனது ரசிகர்கள் மத்தியில் உரையாற்றினார். அதன்படி, நான் எங்கு சென்றாலும் எப்போது திருமணம் என கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அது நடக்கும்போது நடக்கும். தனியாக இருக்கிறேன், அல்லது குடும்பமாக இருப்பேன் என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நாம் ஒழுங்காக, நிம்மதியாக இருக்கிறோமா என்பது தான் முக்கியம். நாம் சந்தோஷமாக இருந்தாலே போதுமானது. 4 பேரை நிம்மதியாக பார்த்துக் கொள்ள முடிந்தால் போதும். நான் தத்துவம் பேசுவதாக நினைக்க வேண்டாம். அந்த அளவுக்கு வாழ்க்கையில் ரொம்ப அடி வாங்கியிருக்கேன். அதனால் தான் இப்படி பேசுகிறேன்.
சிம்புவும் சர்ச்சைகளும்
தமிழ் சினிமாவில் சிம்பு போன்ற சர்ச்சைகளில் சிக்கி பிரச்னைகளை சந்தித்த பிரபலம் எவரும் கிடையாது. ஆனால் அவற்றையெல்லாம் கடந்து தற்போது அவர் ரசிகர்களால் கொண்டாடப்படுபவராக இருப்பது தான் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விஷயமாக உள்ளது. பட தோல்வி, தனிப்பட்ட வாழ்க்கையில் கசப்பான சம்பவங்கள், எதிர்ப்புகள் என அவர் சந்திக்காத விஷயங்களே கிடையாது. ஆனால் சிம்புவின் பெற்றோர், ரசிகர்கள் ஆதரவுடன் அதனையெல்லாம் கடந்து தற்போது தொடர்ச்சியாக படங்கள் நடித்து வருகிறார்.
அடுத்ததாக சிம்புவின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் நிலையில் அனிருத் இசைமைக்கிறார். அரசன் பட ஷூட்டிங் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.