தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் காதல் அழிவதில்லை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, பன்முகத்திறமையுடன் வலம் வந்து கோலோச்சி வரும் நடிகர் சிம்பு.


சில ஆண்டுகளுக்கு முன் இறங்குமுகத்திலும் பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் திரைத்துறையில் பயணித்த சிம்பு, தொடர்ந்து மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் மூலம், சிறப்பான கம்பேக் கொடுத்து தற்போது முழுவீச்சில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.


தற்போது 40 வயதாகும் சிம்புவின் நடிப்பில் பத்து தல படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதற்காக இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


எனினும் ஒருபுறம் இவரது திருமணம் குறித்த ஏகப்பட்ட வதந்திகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சுற்றி யபடியே உள்ளன. 40 வயதாகும் சிம்புவுக்கு அவரது தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தீவிரமாக பெண் பார்த்து வரும் நிலையில், கூடிய விரைவில் சிம்புவுக்கு திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என அவரது தாயான உஷாவும் விருப்பம் தெரிவித்து வருகிறார்.


சினிமா துறையில் நடிகைகள் சிலருடன் ஏற்கெனவே சிம்பு காதலில் விழுந்து தோல்விகளை சந்தித்துள்ளார். ஆனால் அவற்றையெல்லாம் கடந்து புதிய சிம்புவாக தற்போது சின்சியராக படங்களில் நடித்து வருகிறார்.


எனினும் சிங்கிளாக வலம் வரும் சிம்புவின் திருமணம் பற்றிய சர்ச்சைகள் மட்டும் ஓய்ந்தபாடில்லை. இந்த நடிகையுடன் காதல், அந்த நடிகையை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என  தொடர்ந்து தகவல்கள்  வந்துகொண்டேதான் இருக்கின்றன.


இந்த நிலையில் சில யூடியூப் சேனல்களில் சிம்புவுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து விட்டதாகவும், இலங்கையைச் சேர்ந்த பெரிய தொழிலதிபரின் மகளை சிம்புவுக்கு நிச்சயம் செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி கலந்த குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


இந்த நிலையில் இந்தத் திருமண தகவல்களுக்கு சிம்பு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிம்புவின் மேலாளர் பேசுகையில், ”இலங்கை பெண்ணுடன் சிம்புவுக்கு நிச்சயம் ஆகிவிட்டதாக சில மீடியாக்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது.


இதனை கடுமையாக மறுக்கிறோம். மீடியா நண்பர்கள் திருமணம் போன்ற விஷயங்களில் எங்களிடம் உறுதிபடுத்திவிட்டு செய்திகளை வெளியிடுங்கள். நல்ல செய்தி என்றால் முதலில் உங்களை அழைத்து உங்களிடம் தான்‌ பகிர்ந்துகொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.


முன்னதாக வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழாவின் போது பசங்களை அவர்களது சிங்கிள் வாழ்க்கையை வாழ விடுங்கள், கல்யாணம் கல்யாணம் என தொல்லை தராதீர்கள், சமூகம் தரும் அழுத்தத்தால் நிறைய தவறான திருமணங்கள் நடக்கின்றன” என சிம்பு நொந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.