என் படத்தின் பிரமோஷன் பணிகளில் எப்போதும் இரண்டு மடங்கு கவனம் செலுத்துவேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். 


டக்கர் படம் ரிலீஸ்


நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் சித்தார்த் நடிப்பில் ‘டக்கர்’ படம் இன்று வெளியாகியுள்ளது. கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை திவ்யான்ஷா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் டக்கர் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படமும் ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தனர். 


இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சித்தார்த், சினிமா வாழ்க்கை பற்றியும், ஆடியன்ஸின் எதிர்பார்ப்பு பற்றியும் பேசியுள்ளார். அதில், “நான் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு எனது படத்துடன் வருகிறேன். கொரோனா காலகட்டம் மக்களை புரட்டிப் போட்டு விட்டது. அதைக் கடந்து நாம் திரும்ப வந்து கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் எனது எதிர்காலத்தில் முதல் படியாக டக்கர் படம் உள்ளது.


இது மிகவும் ஜனரஞ்சகமான கமர்சியல் படம் மற்றும் நான் இதுவரை பண்ணாத களத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு நன்றாக ஓடக்கூடிய ஜாலியான படம் எடுத்து விடலாம். ஆனால் யாருக்காக படம் எடுக்கப்பட்டதோ அவர்களுக்கு அதனை புரிய வைத்து தியேட்டருக்கு வரவழைத்து வருவது மிகவும் சவாலான செயலாக உள்ளது. அதனால் பிரமோஷன் பணிகளில் எப்போதும் நான் இரண்டு மடங்கு கவனம் செலுத்துவேன்.


ஆடியன்ஸ் என்பது ஒருவர் கிடையாது


என்னை பொறுத்தவரை ஆடியன்ஸ் என்பது ஒருவர் கிடையாது. சிலர் சொல்வார்கள் பத்து வருடத்திற்கு முன் வரவேண்டிய கதை இப்போது வந்துவிட்டது. சிலரோ 20 வருடங்களுக்கு முன்னால் உள்ள கதையை இப்போது எடுத்து உள்ளார்கள் என சொல்வார்கள். அதனால் கால மாற்றத்தில் ஆடியன்ஸ் என்பவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.


நான் உதவி இயக்குனராக இருந்த காலகட்டத்தில் ரசிகர்களின் கரகோஷத்தை வைத்து ஒரு படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்வோம். ஆனால் இன்றைக்கு கரகோஷத்திலேயே 200 வகை உள்ளது. படம் எடுப்பது என்பது அவ்வளவு ஈஸி கிடையாது. அது ஒரு தவம். அந்த வழியில் தான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு படம் வெற்றி பெறுகிறது தோல்வி அடைகிறது புது ட்ரெண்ட் உருவாகிறது புது ஹீரோ ஹீரோயின் கிடைக்கிறார்கள்.


இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு நீங்கள் எந்த நோக்கத்தை கொண்டு படம் எடுக்க வந்ததை மாற்றிக்கொள்ள தொடங்குகிறீர்களோ அது சம்பந்தமே இல்லாத ஒன்றாக மாறிவிடும். அதனால் எந்த காரணத்திற்காக படம் எடுக்க வந்தீர்களோ அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டு எடுக்க வேண்டும்.


கமலுக்குப் பிறகு நான் தான்..


மேலும் குறிப்பிட்ட ஒரு அடையாளத்துடன் என்னை குறிப்பிடும்போது அது குறித்து நான் கருத்து தெரிவித்தால் என்னை திமிரு பிடித்தவன் என சொல்வார்கள். உண்மையில் நான் திமிரு புடிச்சவன் நான். இன்றைக்கு சொல்லப்படும் பேன் இந்தியா போன்ற வார்த்தைகள் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே என் வாழ்க்கையில் நடந்த விஷயம். சொல்லப்போனால் கமலுக்குப் பிறகு மற்ற மொழிகளை புரிந்து கொண்டு அதில் பேச முயற்சி செய்தது நான்தான். ஆனால் என்னை வெளி ஆளாக பார்ப்பது டிரெண்டாக உள்ளது. அதை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன். காரணம் எல்லோருக்கும்  என்னை தெரிந்து இருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன் என அந்த நேர்காணலில் சித்தார்த் கூறியுள்ளார்.