மகாராஜா


விஜய் சேதுபதி நடித்து நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் திரையரங்கில் வெளியானது. திரையரங்கில் 100 கோடிக்கும் மேலாக வசூலித்து பின் ஓடிடியில் வெளியாகிய இப்படம் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி , தெலுங்கு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக மகாராஜா படம் இடம்பிடித்துள்ளது. மேலும் சர்வதேச  மெல்பர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதினை வென்றுள்ளது.


சாந்தனுவிடம் கதை சொன்ன நிதிலன் ஸ்வாமிநாதன்


மகாராஜா படத்தின் கதையை பத்து ஆண்டுகளுக்கு முன்பே தான் சில நடிகர்களிடம் சொன்னதாக படத்தின் இயக்குநர் நிதிலன் ஸ்வாமிநாதன் தெரிவித்தார். அப்படிதான் நடிகர் சாந்தனுவிடம் கதை சொன்னதாகவும், அவருக்கும் கதை பிடித்து அவர் நிறைய தயாரிப்பாளர்களிடம் இந்த கதையை சொன்ன வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததாகவும், ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இந்த கதை பிடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


இப்படி நாட்கள் சென்றதால் இந்த கதையை ஓரம்கட்டி, பின் தான் எடுத்த படம் தான் குரங்கு பொம்மை என்று நிதிலன் ஸ்வாமி நாதன் தெரிவித்தார். மகாராஜா படத்தை சாந்தனு நடிக்காததற்கு அவரது தந்தை பாக்கியராஜ்தான் காரணம் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகர் சாந்தனு தற்போது விளக்கமளித்துள்ளார். 


நடிகர் சாந்தனு விளக்கம்






தனது பதிவில் சாந்தனு “10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்திற்கு இயக்குநர் நிதிலன் உயிர் கொடுத்திருக்கிறார் என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. மேலும் எனக்கு உரிய மரியாதையையும் அவர் கொடுத்து இதை பேசியிருக்கிறார்.  நிதிலன் இந்த கதையை என்னிடம் சொன்னது கூட என் தந்தைக்கு தெரியாது. நானோ என்னுடைய தந்தையோ இந்த கதையை நிராகரிக்கவில்லை . அன்றைய சூழலில் தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்க தயங்கினார்கள்.  நல்ல கதைகளை நான் எப்போதும் தேடிச் செல்கிறேன். எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்“ என்று சாந்தனு தெரிவித்துள்ளார்.