இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகும் ‘பர்த்மார்க்’ படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் கல்லாரக்கல் ஹீரோவாக நடிக்கும் தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஷயன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்து ஓடிடியில் வெளியான படம் “சார்பட்டா பரம்பரை”. இந்த படத்தில் கலக்கலான ‘டான்ஸிங் ரோஸ்’ கேரக்டரில் ஷபீர் கல்லாரக்கல் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே பெற்றார். அப்படியான ஷபீர் அடுத்ததாக ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ’பர்த்மார்க்’ என பெயரிடப்பட்டுள்ளது. மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் காட்சிகள் அடங்கிய படமாக இது உருவாகியுள்ளது. கண்டிப்பாக இந்த திரைப்படம் ஒரு தனித்துவமான எண்ணத்தை பார்வையாளர்களுக்கு உருவாக்கி முதல் தரமான சினிமா அனுபவத்தை வழங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ‘டான்ஸிங் ரோஸ்’ என்ற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பால் புகழ் பெற்ற நடிகர் ஷபீர் கல்லராக்கல் இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில் மிர்னா கதாநாயகியாக நடிக்கிறார்.
பரத்மார்க் படம் குறித்து இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறும்போது, “இந்த கதை ஒரு மிஸ்ட்ரி-டிராமாவாக இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், டேனியல் (அ) டேனியாக என்னும் கேரக்டரில் ஷபீர் கல்லாரக்கல் மற்றும் ஜெனிபராக மிர்னா நடிக்கிறார்கள். இந்த கதை 90’களில் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. கார்கில் போருக்குப் பிறகு தாயகம் திரும்பிய டேனி என்ற சிப்பாய், தன்வந்திரி என்ற கிராமத்துக்கு கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை அழைத்து செல்கிறார்.
எந்தவிதமான சிக்கல்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் இயற்கையான பிரசவத்திற்குப் பெயர் போன இடம் இந்த கிராமம். இது போன்ற கிராமங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் உள்ளது.படத்தின் முன்னணி கதாபாத்திரங்கள் இந்த கிராமத்தில் தங்கியிருந்தபோது, அவர்கள் ஏதோ வித்தியாசமானதாக உணரும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனையான கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கதை கொரோனா காலக்கட்டத்தில் உருவானது. நான் இந்தியாவின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள இது போன்ற கிராமங்களைப் பார்த்துள்ளேன். அறுவை சிகிச்சை சிக்கல்கள் இல்லாமல் இயற்கையான பிரசவத்திற்கு உதவும் வகையிலான இந்த பாரம்பரியத்தை பல தம்பதிகள் விரும்புவதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
படத்தில் சில மர்மங்கள் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் உள்ளது. ஆனால், அதை விட எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். குழந்தை பிறக்கும் செயல்முறை ஆண்கள் நினைப்பது போல் எளிதானது அல்ல. உடல்ரீதியான சவால்கள் தாண்டி மனரீதியாக பெண்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் குறித்தும் பேசப்பட வேண்டும். இது போன்றதொரு காலக்கட்டத்தில் தன் மனைவியுடன் கணவன் வரும்போது அவன் மீண்டும் பிறக்கிறான். மேலும், இது தன் தாய் மீதும் பெண்கள் மீதும் மரியாதையை அவனுக்கு ஏற்படுத்துகிறது.
கிராமத்தின் இயற்கை சூழலை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே அமைந்துள்ள மறையூர் கிராமத்தின் குறுக்கே ஒரு கிராமத்தை படக்குழு அமைத்துள்ளது. தொண்ணூறுகளில் நடக்கும் கதை இது என்பதால் அதற்கேற்றபடி, கதையின் ஒவ்வொரு பிரேமும் கச்சிதமாக அமைய தேவையான ஆய்வு செய்யப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.