நடிகர் ஷாம் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கியமான சம்பவங்களை பற்றி காணலாம்.
- 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி பிறந்த ஷாம் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் தீவிரம் காட்டி வந்தார். பல்வேறு விளம்பரங்களில் தோன்றிய அவர் முதல் முதலில் குணால் நடித்த காதலர் தினம் படத்தில் தான் ஆடிஷனுக்காக வந்தார். ஆனால் தேர்வாகாத நிலையில் அந்த வாய்ப்பின் மூலம் இயக்குநர் ஜீவாவை சந்தித்தார். முதலில் விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே ஷாம் இருப்பார். ஆனால் அதற்கு முன்னதாகவே 12 பி படத்தில் ஹீரோவாக ஷாம் நடித்தார். அப்படம் தாமதமாக வெளியானது.
- நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் இருந்தபோது ஷாமுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. படம் ஒன்றில் சம்பள பாக்கிக்காக டப்பிங் பேச மாட்டேன் என சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர் ஆட்களை வீட்டுக்கு அனுப்பி ஷாமை மிரட்டியுள்ளார். உடனடியாக விஷயத்தை விஜயகாந்திடம் சொல்ல, அவர் நீ போனை அணைத்து விட்டு தூங்கு. இனிமேல் அது என் பிரச்சினை என சொல்லி அதனை முடிவுக்கு கொண்டுள்ளார்.
- ஷாம் நடித்த இயற்கை படத்தை சினிமா காதலர்களால் என்றும் மறக்க முடியாது. அப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கடைசி நேரத்தில் காணாமல் போன காதலன் அருண் விஜய் வந்து ஹீரோயினுடன் சேர்ந்து விடுவார். படம் முழுக்க ஹீரோயினை காதலிக்க வைக்க போராடிய ஷாமுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். இந்த கிளைமேக்ஸால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் இன்றுவரை ஷாமுக்கு ஆதரவாக அருண் விஜய்யை திட்டி தீர்த்து வருகின்றனர்.
- நடிகர் அஜித்தின் மகளும்,ஷாமின் மகளும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். இதனால் பள்ளியின் முக்கியமான தினங்களில் எல்லாம் இவர் தவறாமல் பள்ளியில் ஆஜராகி நடிகர் அஜித்தை பார்த்து விடுவாராம்.
- ஆரம்ப காலக்கட்டத்தில் தயாரிப்பாளர் சொன்னார் என்பதற்காக லேசா லேசா படமும், மறைந்த இயக்குநர் ஜீவா சொன்னார் என்பதற்காக உள்ளம் கேட்குமே படம் செய்துள்ளார் ஷாம். அவர் முதல்முதலாக கதை கேட்டு ஓகே செய்த படம் என்றால் அது இயற்கை தான். அந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.
- ஜோதிகா, சிம்ரன், சினேகா, லைலா, திவ்யா ஸ்பந்தனா, திரிஷா, மீரா ஜாஸ்மின் என அன்றைய காலக்கட்டத்தில் பிரபலமான திகழ்ந்த பல நடிகைகள் ஷாமுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். 6 மெழுகுவர்த்திகள் படத்தின் ஒரு காட்சிக்காக கிட்டதட்ட 9 நாட்கள் தூங்காமல் இருந்துள்ளார். இப்படிப்பட்ட ஷாமுக்கு எதிர்பார்த்த வெற்றிகள் என்பது மிகக்குறைவாகவே அமைந்துள்ளது. ஆனாலும் அவரின் ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்கள் மனதில் என்றைக்கும் நீங்கா இடம் பிடித்துள்ளது.