நெஞ்சு வலி ஏற்பட்டதால் நடிகர் சாயாஜி ஷிண்டே மகாராஷ்ட்ராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சாயாஜி ஷிண்டே


தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகராக இருப்பவர் சாயாஜி ஷிண்டே.  தமிழில் மஹாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான பாரதி படத்தில் பாரதியாராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் சாயாஜி ஷிண்டே. தனுஷ் நடித்த படிக்காதவன் , விஷால் நடித்த வெடி, அனுஷ்கா நடித்த அருந்ததி, விஜய் நடித்த வேட்டைக்காரன் என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும், சில குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். 


ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்ரமணியன் படத்தில் ஜெனிலியாவின் தந்தையாக நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதே போல் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பக்கம் வில்லன் இன்னொரு பக்கம் காமெடியன் என இருவகையான கேரக்டரில் நடித்திருப்பார். தமிழில் 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ள சாயாஜி ஷிண்டே தெலுங்கு , மலையாளம் , குஜராத்தி , மற்றும் மராத்தி மொழிகளைச் சேர்த்து 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேடை நாடகக் கலைஞராக இருந்து பிரபலமான அவர் மராத்தி மொழியில் அதிகம் கொண்டாடப் பட்ட நாடகக் கலைஞர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.


சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான கில்லர் சூப் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


 நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி






கடந்த சில நாட்களாக லேசான நெஞ்சு வலியை எதிர்கொண்டு வந்த சாயாஜி ஷிண்டேவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது அவரது இதயத்தின் வலது புறத்தில் ரத்த குழாயில்  அடைப்பு இருந்ததாக தெரியவந்துள்ளது . மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடனடியாக மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் சதாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடைபெற்றது. தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள்.