பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க என்னிடம் யாரும் கேட்கவில்லை என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். 


அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலிசோடா, 10 எண்றதுக்குள்ள, கோலிசோடா 2, கடுகு உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் அடுத்ததாக “மழை பிடிக்காத மனிதன்” படத்தை எடுத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு அகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் சரத்குமார் , சத்யராஜ், மேகா ஆகாஷ் , முரளி ஷர்மா , தலைவாசல் விஜய் , சரண்யா பொன்வண்ணன் என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா ஒன்று நடைபெற்றது.


இதில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ், “மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டிய கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன். அதற்காக தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் விஜய் மில்டனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் விஜயகாந்தை விஜி என்று தான் அழைப்பேன். கோலி சோடா படம் பார்த்திருக்கேன் என்பதால் விஜய் மில்டன் தான் இயக்கிறார் என்பதால் கதையே கேட்காமல் ஓகே சொல்லி விட்டேன். விஜய் ஆண்டனியுடன் நான் நடிக்கும் 3வது படமாகும். அவருடன் நடிக்கும்போது ரொம்ப எளிதாக இருக்கும். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்ற நிலையில் அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் நான் கடவுளை தொல்லை பண்ணுவது இல்லை. 


மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் மிக பிரமாதமாக வந்துள்ளது. சினிமா வந்து புது புது விஷயங்களால் மாறிக்கொண்டே இருக்கிறது. நான் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் பயணப்பட காரணம் சூழலுக்கு ஏற்ற மாதிரி மாறிக் கொள்வது தான். வில்லனாக நடித்தால் நல்ல பெயர்  வரும் என்ற நிலை வந்து விட்டது. எனக்கு பலவிதமான கேரக்டர்களை கொடுத்த இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஜூன் 7 ஆம் தேதி தமிழில் ஒரு படமும், இந்தியில் ஒரு படமும் என்னுடைய நடிப்பில் வெளிவருகிறது. 


பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க என்னிடம் யாரும் கேட்கவில்லை. பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்றால் என் நண்பர் மணிவண்ணன் இயக்கினால் அருமையாக இருக்கும். இல்லையென்றால் மாரி செல்வராஜ் , பா.ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இயக்கினால் மிக அருமையாக இருக்கும். அவர்கள் தான் இருப்பதை அப்படியே எடுப்பார்கள்” என சத்யராஜ் தெரிவித்துள்ளார்.