இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தற்போது டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறார். ஆனால் அவரது மனைவி ரித்திகா சஜ்தே தற்போது சமூக வலைதளங்களில் வன்மம் பிடித்த நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.


ரோஹித் சர்மாவின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றில்,  'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' என பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பகிரப்பட்ட சிறிது நேரத்திற்கு ரித்திகாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை ஸ்கிரீன்ஷாட்களை எடுத்து X இல் வெளியிட்டு மக்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். 


பல பிரபலங்களும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு:


ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா மட்டுமல்லாது இந்தியாவை சேர்ந்த பல பிரபலங்களுன் 'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' என்ற புகைப்படத்தை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஏன் இந்த ஆதரவு பதிவு என்று கேட்பவர்களுக்கு விளக்கம் அளிக்கும்விதமாக என்ன நடந்தது என்று இங்கு பார்ப்போம். 


 இஸ்ரேல் சமீபத்தில் பாலஸ்தீன நகரமான ரஃபா மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதன் காரணமாக 45 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து, இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில், ”இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழி தாக்குதலால் தற்போது குறைந்தது 14 லட்சம் பேர் ரஃபாவில் தங்குமிடம் இல்லாமல் எங்கே தங்குவது என்று தேடி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, நேற்று முதல் சமூக ஊடகங்களில் 'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' என்ற ஹேஷ்டேக் உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது.


உலகம் முழுவதும் ட்ரெண்டான இதே புகைப்படத்தைதான் ரோஹித் சர்மாவின் மனைவியான ரித்திகா சஜ்தேவும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், 'ஆல் ஐஸ் ஆன் ரஃபா' ஆங்கில வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்தார். இதையடுத்து, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக எப்படி ரோஹித் சர்மாவின் மனைவி எப்படி பதிவிடலாம் என பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். 


அப்படி என்ன ட்ரோல்..? 


















ஒரு பிராமண குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ரித்திகா இதுவரை காஷ்மீரில் இந்துக்கள் பட்ட கஷ்டத்தை பற்றி பேசவில்லை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இந்துகள் பட்ட துயரத்தை பற்றி பேசவில்லை. ஆனால், பாலஸ்தீனத்தில் உள்ள முஸ்லீம்களுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார் என ட்ரோல் செய்து வருகின்றனர். 


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல்: 


ரஃபா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்ட அவர், “இராணுவ நடவடிக்கையின் நோக்கம் எந்தவொரு நாட்டின் சாதாரண குடிமக்களுக்கும் ஒருபோதும் தீங்கு விளைவிப்பதில்லை. தாக்குதலில் சிலர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது” என தெரிவித்தார்.


2023 இல் தொடங்கிய இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு, பாலஸ்தீனத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.