நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள்  என ரசிகர்களுக்கு நடிகர் சத்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 






தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான சத்யராஜ், தற்போது பல படங்களிலும் குணச்சித்திர, காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வீட்ல விசேஷம் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் உட்பட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இதனிடையே உலக தற்கொலை தடுப்பு தினமான நேற்று மனதின் மையம் அறக்கட்டளை சார்பில் நேசம் என்ற தற்கொலை தடுப்பு மையம் ஈரோட்டில் தொடங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.


நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். காரணம் முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாவதற்கு எது தடையாக இருந்தாலும் அது நீக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து என தெரிவித்தார். மேலும் அதிகரித்து வரும் தற்கொலை தொடர்பான செய்திகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் என்பவருக்கு ஐன்ஸ்டீன் அளவுக்கு எல்லாம் தெரியும் நினைக்கக்கூடாது. இது சமூகத்தின் மிகப்பெரிய தவறு.


நீங்கள் ஏன் நடிகர், நடிகைகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்? என கேள்வியெழுப்பிய சத்யராஜ், நாங்கள் ஸ்டார்ட், கேமரா, ஆக்‌ஷன் என்றால் நடிப்போம். அவ்வளவு தான். எனவே எங்களுக்கு சோறு மட்டும் போடுங்கள். தலையில் வைத்து கொண்டாடாதீர்கள். இதுதான் எனக்கு ஊடகங்கள் மேல் உள்ள வருத்தம். நடிகர்கள் யாரும் காரல் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்லது ஏதோ அறிஞர்களோ இல்லை என்பதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள். 


மேலும் எனக்கு நான் தான் ராஜா. இந்த நிகழ்ச்சியை திசை திருப்பி எங்கோ கொண்டு செல்கிறீர்கள். ஊடகத்தினருக்கு சமூக அக்கறை இல்லை என தெரிவிக்க அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.