சத்யராஜ்


தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின், முன்னணி நடிகர் தற்போது குணச்சித்திர நடிகர் என பல முகங்களைக் கொண்டவர் நடிகர் சத்யராஜ்.  கிட்டத்தட்ட 75 படங்களில் வில்லனாக நடித்துள்ள சத்யராஜ் தமிழ், தெலுங்கு, மலையாள உள்ளிட்ட 200 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். காலத்திற்கு ஏற்றார் போல் அடுத்த தலைமுறை நடிகர்களின் வருகைக்குப் பின் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


ஒவ்வொரு மாதம் வெளியாகும் ஏதோ ஒரு படத்தில் நாம் சத்யராஜைப் பார்க்கலாம்.  நண்பன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, சிகரம் தொடு, பூஜை, பாகுபலி, மெர்சல், கடைக்குட்டி சிங்கம், கனா, வீட்ல விசேஷம், லவ் டுடே, சிங்கப்பூர் சலூன் என அடுத்தடுத்து புதுப்புது கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் நடிகராக இருந்து வருகிறார். அடுத்தபடியாக அவர் நடிக்க இருக்கும் படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் கூட்டணி சேர இருக்கிறார் சத்யராஜ்


இத்தனை வருடம் ஏன் ரஜினியுடன் நடிக்கவில்லை


ரஜினிகாந்த் நடித்த தம்பிக்கு எந்த ஊரு, மூன்று முகம், நான் சிகப்பு மனிதன் ,மிஸ்டர் பாரத், பாயும் புலி உள்ளிட்ட படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார் சத்ய்ராஜ் . மிஸ்டர் பாரத் படத்தைத் தொடர்ந்து ரஜினி மற்றும் சத்யராஜூக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக சினிமா வட்டாரங்களில் நிறைய கதைகள் பரவியுள்ளன.


சத்யராஜ் பல மேடைகளில் ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்துப் பேசியது ரஜினி ரசிகர்களிடையே பெரும் ஆவேசத்தை ஏற்படுத்தியது. சமீப காலங்களில் ரஜினியின் வளர்ச்சியை சத்யராஜ் வெளிப்படையாகப் பாராட்டி வருகிறார். கடந்த 38 ஆண்டுகளில் ரஜினி படங்களில் தான் நடிக்காத காரணத்தை நடிகர் சத்யராஜ் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். 


இந்த நேர்காணலில் பேசிய அவர். “நான் நாயகனாக நடிக்கத் தொடங்கியப் பின் இரண்டு முறை ரஜினி படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. சிவாஜி மற்றும் எந்திரன். இரண்டு படங்களிலுமே வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் தான் என்பதால் என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததாக நான் கருதினேன். இதனால் நான் இந்தப் படங்களில் நடிக்கவில்லை. மற்றபடி ரஜினி படத்தில் நான் நடிக்காததற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்” என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார்.


கூலி


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் படம் கூலி. ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ் ரஜினியின் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கூலி தவிர்த்து சத்யராஜ் வசந்த் ரவி நடித்துள்ள வெப்பன் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர் முருகதாஸ் இந்தியில் சல்மான் கானை வைத்து இயக்க இருக்கும் சிகந்தர் படத்திலும் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.