Lok Sabha Speaker Powers: மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி நிலவும் நிலையில், அதன் அதிகாரம் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


மக்களவை தேர்தல் முடிவுகள்:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பன்மை கிடைக்கவில்லை. இதையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதற்கு சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதேநேரம் ஆதரவு அளிப்பதற்கு சில முக்கிய நிபந்தனைகளை அக்கட்சி விதித்துள்ளது. அதனை பூர்த்தி செய்து கொடுத்தால் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பதாக, நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி..! 


சந்திரபாபு நாயுடு 3 கேபினட் அமைச்சர் உட்பட 6 அமைச்சர் பதவிகளையும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் சபாநாயகர் பதவி கேட்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், நிதிஷ் குமாரும் 3 கேபினட் அமைச்சர் பதவி உட்பட, சபாநாயகர் பதவியும் கேட்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணிக்காக இரண்டு முக்கிய கட்சிகளும் சபாநாயகர் பதவி கேட்பதால், யாருக்கு அதை ஒதுக்குவது என்பது தெரியாமல் பாஜக குழம்பி வருகிறது. அதேநேரம் முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவியை தங்களிடையே வைத்துக் கொள்ளவும் பாஜக முயன்று வருகிறது.


சபாநாயகர் பதவியின் அதிகாரம் என்ன?



  • சபாநாயகர் தான் மக்களவையில் எந்த மசோதா விவாதிக்கப்பட வேண்டும், விவாதிக்கப்படக் கூடாது என்பதை இறுதி செய்வார். 

  • மக்களவையில் ஒழுக்கத்துடன் விவாதம் நடைபெற்று மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது உறுதி செய்வார்

  • அவை விதிகளை மீறி செயல்படும் உறுப்பினரை இடைநீக்கம் செய்த தண்டிக்கும் அதிகாரம் கொண்டிருப்பார்.

  • நம்பிக்கையில்லா திர்மானம் , ஒத்திவைப்புத் தீர்மானம் , தணிக்கைத் தீர்மானம் மற்றும் கவன ஈர்ப்பு தீர்மானம் போன்ற பல்வேறு வகையான தீர்மானங்களை கொண்டுவர சபாநாயகரின் அனுமதி அவசியம்.

  • கூட்டத்தின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நிகழ்ச்சி நிரல் குறித்து சபாநாயகர் தான் முடிவு செய்வார்.

  • இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கும் சபாநாயகர் தலைமை தாங்குகிறார் .

  • முன்னுரிமை வரிசையில் , இந்திய தலைமை நீதிபதியுடன் , மக்களவையின் சபாநாயகர் ஆறாவது இடத்தில் உள்ளார் .

  • மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களுக்கும் ராஜ்யசபாவின் பரிசீலனைக்கு செல்ல சபாநாயகரின் கையெழுத்து அவசியம்.

  • மசோதாக்களின் மீதான வாக்கெடுப்பு சமனில் முடிந்தால், சபாநாயகர் வாக்களித்து முடிவை அறிவிக்கலாம்.

  • மக்களவையில் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து சட்டப்பிரிவு 122 இன் படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது.


சபாநாயகரை பதவிநீக்கம் செய்ய முடியுமா?


இந்திய அரசியலமைப்புச் சட்டம் [பிரிவு 94] படி, மக்களவையின் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் சபாநாயகரை நீக்க முடியும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவுகள் 7 மற்றும் 8 ன் கீழ் மக்களவை உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்படலாம் .