சத்யராஜ்
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின், முன்னணி நடிகர் தற்போது குணச்சித்திர நடிகர் என பல முகங்களைக் கொண்டவர் நடிகர் சத்யராஜ். கிட்டத்தட்ட 75 படங்களில் வில்லனாக நடித்துள்ள சத்யராஜ் தமிழ், தெலுங்கு, மலையாள உள்ளிட்ட 200 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். காலத்திற்கு ஏற்றார் போல் அடுத்த தலைமுறை நடிகர்களின் வருகைக்குப் பின் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நண்பன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, சிகரம் தொடு, பூஜை, பாகுபலி, மெர்சல், கடைக்குட்டி சிங்கம், கனா, வீட்ல விசேஷம், லவ் டுடே, சிங்கப்பூர் சலூன் என அடுத்தடுத்து புதுப்புது கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் நடிகராக இருந்து வருகிறார். அடுத்தபடியாக அவர் நடிக்க இருக்கும் படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. தற்போது கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் கூலி படத்தில் இணைந்து நடிக்கிறார் நடிகர் சத்யராஜ். சத்யராஜின் மகன் சிபிராஜ் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். மகள் திவ்யா சத்யராஜ் திரை வாழ்க்கையை விட்டு விலகி இருந்து வருகிறார் என்றாலும் அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.
4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் சத்யராஜ் மனைவி
சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தனது அம்மா மகேஸ்வரியைப் பற்றி சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். கடந்த 4 ஆண்டுகளாக தனது அம்மா கோமாவில் இருந்து வருவதாகவும் தானும் தனது தந்தையும் அவரை பார்த்து வருவதாகவும் இந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். " மூலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் என் அம்மா கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வருகிறார். அவருக்கு PEG ட்யூப் மூலமாக தான் உணவளித்து வருகிறோம். என் அப்பாவின் அம்மா சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கடந்த 4 வருடங்களாக என் தந்தை ஒரு சிங்கில் பேரண்டாக இருக்கிறார். நானும் என் அப்பாவிற்கு ஒரு அம்மாவைப் போல் இருந்து வருகிறேன். அம்மாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவோம் என நாங்கள் நம்புகிறோம். நானும் என் அப்பாவும் இணைந்து ஒரு உறுதியான சிங்கிள் பேரண்ட் குழுவை உருவாக்கி இருக்கிறோம். " என திவ்யா சத்யராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.