Raja Raja Cholan: தேவர், உடையார்.... ராஜராஜ சோழன் எந்த சாதியை சேர்ந்தவர்..? - வேண்டாம்... வேண்டாம் இது வேண்டாம் அரசே

சாதி ரீதியிலான வட்டத்துக்குள் அவரை அடைத்து சிறுமைப்படுத்தக்கூடாது. கல்வெட்டில் அவர் எந்த 'குலம்' என்றும் எந்த 'சாதி' என்றும் குறிப்பிட்டது இல்லை.

Continues below advertisement

தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் அனைத்து மக்களுக்குமான நல்லாட்சியை நடத்தியவர். அவரை சாதிய ரீதியாக வளைக்க நினைக்கும் அமைப்புகளால் ஆண்டுதோறும் கசப்பான சம்பவங்கள் நிகழ்கிறது. எனவே சாதிய ரீதியிலான இதுபோன்ற செயல்களை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Continues below advertisement

மாமன்னன் ராஜராஜ சோழனை பெரும்பாலான கல்வெட்டுகள் அருண்மொழி எனக் குறிப்பிடுகின்றன. தஞ்சைப் பெரியகோயிலின் இரண்டாம் வாயிலான ராஜராஜன் கோபுர வாயில் கல்வெட்டில் அருண்மொழி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ராஜராஜசோழனுக்கு 42 சிறப்புப் பெயர்களும் சூட்டப்பட்டன. 

அபயகுலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருள்மொழி, அழகிய சோழன், இரணமுகபீமன், இராஜாச்ரயன், சோழேந்திரசிம்மன், இராஜமார்த்தாண்டன், இராஜேந்திரசிம்மன், இராஜவிநோதன், இரவிகுல மாணிக்கன், இரவிவம்ச சிகாமணி, இராஜ கண்டியன், இராஜ சர்வக்ஞன், இராஜராஜன், இராஜகேசரிவர்மன், உத்தமசோழன், உத்துங்கதுங்கன், உய்யகொண்டான், உலகளந்தான், கேரளாந்தகன், திருமுறை கண்ட சோழன், தெலிங்ககுல காலன், நிகரிலி சோழன், நித்யவிநோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச் சோழன், மூர்த்த விக்கரமாபரணன், சண்ட பராக்ரமன், சத்ரு புஜங்கன், சிங்களாந்தகன்,  சிவபாதசேகரன், சோழகுல சுந்தரன், சோழ மார்த்தாண்டன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், சத்திரிய சிகாமணி, கீர்த்தி பராக்கிரமன், சோழ நாராயணன், தைல குலகாலன் என்று சிறப்பு பெயர்களால் ராஜராஜ சோழன் அழைக்கப்பட்டார்.


நிர்வாகம், வலிமையான ராணுவப்பிரிவுகள் என்று மிகத் திறமையாக ஆட்சிப்புரிந்த ராஜ ராஜ சோழனின் சிறப்பு பெயர்களில் சிவபாத சேகரன், திருமுறைகண்ட சோழன், இராஜவிநோதன், பண்டித சோழன், பெரிய பெருமாள், ஜனநாதன் ஆகிய பட்டங்களின் ஒட்டுமொத்தமான உருவம்தான் தஞ்சைப் பெரியகோயில் என்று தெரிவிக்கப்படுகிறது.

இப்படி பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கி ராஜகேசரி என்ற பட்டத்தைப் பூண்டு, கி.பி 1014 வரை ராஜராஜ சோழன் ஆட்சி புரிந்துள்ளார். இவர் முடிசூடிய நாளை சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய பெருமைகளை கொண்ட ராஜராஜ சோழனை கடந்த சில ஆண்டுகளாக பல சாதிய அமைப்புகள் தங்கள் சாதியை சேர்ந்தவர் என்று கூறி வருவது மக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலரும், வக்கீலுமான ஜீவக்குமார் கூறியதாவது: மாமன்னர் ராஜ ராஜ சோழன் மிக்க பெருமை வாய்ந்தவர். இவர் எந்த சாதியையும் சேர்ந்தவர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழன் அனைவருக்குமான மன்னராக நீதி வழுவாமல் ஆட்சி புரிந்துள்ளார். ஆனால் தற்போது பல அமைப்புகள் ராஜராஜ சோழனை சாதிய வட்டத்திற்கு இழுக்க பார்க்கின்றன. போர் களம் கண்டு தமிழர்களின் பெருமையை உலகறிய செய்த மாமன்னர்தான் ராஜராஜ சோழன். வரலாற்று ஆய்வுகளிலும் அவர் இந்த சாதி என்று குறிப்பிடவில்லை. இப்படிப்பட்ட நிலையில் அவரை சாதி ரீதியில் தங்கள் சாதியை சேர்ந்தவர் என்று கூறுவது சரியானதல்ல. 

அரசு இதற்கு இடம் அளிக்கக்கூடாது. ராஜராஜ சோழன் அவரது காலத்தில், அனைத்து சமயத்திற்கும் நிதி உதவி செய்துள்ளார். பாகுபாடின்றி அனைவரையும் சமமாக பாவித்த ராஜராஜ சோழனின் பெருமையை அனைவரும் உணர வேண்டும். தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் பரவ செய்த ராஜராஜனைக் கொண்டாடுவதற்கு பல சிறந்த காரணங்கள் இருக்கின்றன. சாதி ரீதியிலான வட்டத்துக்குள் அவரை அடைத்து சிறுமைப்படுத்தக்கூடாது. கல்வெட்டில் அவர் எந்த 'குலம்' என்றும் எந்த 'சாதி' என்றும் குறிப்பிட்டது இல்லை. "ராஜராஜ சோழன்" என்று வரும் அவர் பெயருக்கு முன்னாள் வரும் உடையார், தேவர் என்ற பட்டங்களை வைத்து இவரை குறிப்பிட்ட சாதிக்குள் கட்டமைப்பது மிகவும் தவறானது. அந்த பட்டங்களானது, சோழ மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றை மாற்றும் இந்த முயற்சியை அரசு ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதே கருத்தை தஞ்சையை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement