தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விஜய் நடத்தி முடித்த பிறகு தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக அவர் தமிழ் தேசியமும், திராவிடமும் எனது இரு கண்கள் என்று குறிப்பிட்ட பிறகு, விஜய்யைத் தீவிரமாக ஆதரித்து வந்த சீமான் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்.


திராவிடம் - தமிழ் தேசியம்:


மேலும், தமிழ் தேசியம் – திராவிட மோதலும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் தேசியம், திராவிடம் குறித்துப் பேசிய நடிகர் சத்யராஜ், நடிகர் அஜித்திற்கு பாராட்டு தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, “ திராவிடத்திற்கு எதிராக இருப்பது உடன்பாடு இல்லை. அது பெரிய தவறான விஷயம் ஆகும். தமிழ் மன்னர்கள் காலத்தில் ஆரிய மேன்மை என்ற மாயைதான் தமிழுக்கு எதிராக இருந்தது.


திராவிட இயக்கங்களின் வளர்ச்சிதான் அதைத் தடுத்து நிறுத்தியது. இன்னும் தடுத்து நிறுத்திக் கொண்டு இருக்கிறது. தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்ப்பது அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் ஆரியத்திற்கு துணை போவதுதான் என்னுடைய உடன்பாடு. அப்படி போகும்போது சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம் என்ற போர்வையில் சகலவிதமான மூடநம்பிக்கையும் மறுபடியும் வளரும்.


அஜித்திற்கு பாராட்டு:


ஆரிய ஒடுக்குமுறை, பெண்ணடிமைத்தனம், மதச்சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல், அடக்குமுறை எல்லாம் தலைதூக்கும். தம்பி அஜித் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். பைக் டூர் போகும்போது கூறியிருக்கிறார். சம்பந்தமே இல்லாத ஒரு மனிதனைப் பார்த்து கோபம் வருவதற்கு காரணம் மதம்தான். எங்கேயோ ஒரு நாட்டில் ஒருவரை பார்க்கிறோம். அவருக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அவர் இந்த மதம் என்றால் தேவையில்லாமல் இந்த வெறுப்பு வருகிறது என்ற அழகான பதிவை அவர் பதிவிட்டுள்ளார். அதற்கு என்னுடைய பாராட்டுகள்.


ஆரியம் திராவிடத்தை எதிர்ப்பது ஓகே. ஆனால், தமிழ்தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்த்து ஆரியத்திற்கு துணைபோவது மிகவும் ஆபத்தானது ஆகும். “


இவ்வாறு அவர் பேசினார்.

அஜித் பேசியது என்ன?


நடிகர் அஜித்  கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில், பயணத்தை விட சிறந்த கல்வி இருக்க முடியாது. இதுவரையில் நீங்கள் சந்திக்காத மனிதர்களைகூட இந்த சாதியும், மதமும் வெறுக்க வைக்கிறது. அது உண்மைதான். மக்களை பார்க்காமலே அவர்கள் இப்படித்தான் என்று மதிப்பிடக்கூடும். ஆனால், பயணம் செய்யும் போது புதுவிதமான அனுபவத்தின் வாயிலாக பலவற்றை அனுபவிக்கிறோம்.


அதன்மூலமாக பல நாட்டைச் சேர்ந்தவர்கள், மதங்களைச் சேர்ந்தவர்களை சந்திக்கிறோம். அவர்களது கலாச்சார முறை குறித்தும் அறிந்து கொள்கிறோம். மேலும், அவர்களை புரிந்து கொள்ள முடியும். இது உங்களை நல்ல மனிதராக மாற்ற உதவும் என்று அந்த வீடியோவில் அஜித் பேசியிருப்பார். அஜித்தின் அந்த கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்த நிலையில், சத்யராஜ் அஜித்தை பாராட்டி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.