தமிழ் படம் மற்றும் ஏ.எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய சதீஷ் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் பிரபல நகைச்சுவை நடிகராக உருவானார். டைமிங் காமெடிகளின் மூலம் தமிழ் சினிமாவில் நீண்ட நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதனைத் தொடர்ந்து மான் கராத்தே , தாண்டவம், சிகரம் தொடு, நையாண்டி உள்ளிட்ட படங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த சதீஷ் கத்தி திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார்.
பல்வேறு படங்களில் நடித்து வந்த சதீஷ், அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் நகைச்சுவை நடிகர்களுக்கு நடிகராக நடிக்க வேண்டும் என்கிற ஆசையை தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறதோ என்னவோ. கதாநாயகனாக நடிக்க முடிவு செய்தார் சதீஷ்.
அதன்படி சதீஷ் ஹீரோவாக நடித்த கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தை அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கி உள்ளார். படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள நிலையில், அதில் நாசர், சரண்யா, விடி கணேசன், ரெடின் கிங்ஸ்லி, ரெஜினா, பொன்வண்ணன் என பலர் நடித்துள்ளனர்
வழக்கமான ஹாரர் படமாக எடுக்கப்பட்டுள்ள கான்ஜூரிங் கண்ணப்பன் படம் கடந்த 8ம் தேதி திரைக்கு வந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்திற்கான வரவேற்பை கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குநர், செல்வின் ராஜ் சேவியரை சந்தித்த நடிகர் சதிஷ் அவருக்கு அர்மானி வாட்ச் ஒன்றை பரிசளித்து, அதை தனது கையால் கட்டி விட்டுள்ளார்.