ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தின் ஆடியோ வெளியீட்டு  விழா கடந்த நவம்பர் 2 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. ஜாவித் ரியாஸ் இசை அமைத்துள்ள இந்த படத்தில் இந்த படத்தில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  ஓ மை கோஸ்ட்' படத்தின் ஆடியோ வெளியீட்டு  விழாவில் சன்னி லியோன், ஜி.பி.முத்து ஆகியோரின் மேடை பேச்சுக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. 


இந்நிகழ்ச்சியில் நடிகைகளில் சன்னி லியோன் புடவை அணிந்தும், தர்ஷா குப்தா மாடர்ன் உடையிலும் வந்ததை சுட்டிக்காட்டி நடிகர் சதீஷ் பேசினார். அப்போது பம்பாயில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த சன்னி லியோன் எப்படி டிரஸ் பண்ணியிருக்காங்க. கோயம்புத்தூர்ல இருந்து ஒரு பொண்ணு வந்துருக்கு தர்ஷா குப்தா என சொல்லிவிட்டு அவங்க எப்படி நம்ம கலாச்சாரத்துக்கு மாறிட்டாங்கன்னு சொல்ல வந்தேன் என அவர் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மூடர்கூடம் திரைப்பட இயக்குனர் நவீன், பாடகி சின்மயி, பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இது குறித்து காட்டமாக விமர்சித்திருந்த நிலையில் தற்போது நடிகர் சதீஷ் தனது சர்ச்சை கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.


தர்ஷா பேச சொன்னதை தான் நான் பேசினேன் !




நடிகர் சதீஷ் வீடியோ வெளியீட்டு இதுகுறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், சமீபத்தில் நடந்த 'ஓ மை கோஸ்ட்' திரைப்படத்தின் ஆடியோ விழாவில் தர்ஷா குப்தா எனது அருகில் அமர்ந்திருந்தார்.அப்போது தர்ஷா என்னிடம் கூறினார், "நான் சன்னி லியோனை விட மாடர்னாக டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கிறேன். அவங்க எப்படி வராங்க என்று பார்ப்போம்" என்று சொன்னார்கள். சன்னிலியோன் பட்டு புடவை கட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். அதை பார்த்த தர்ஷா, அப்செட் ஆகி என்னிடம் கூறினார்.  "என்னங்க..நான் இப்படி வந்திருக்கிறேன். அவங்க புடவை கட்டிகிட்டு வந்து இருக்காங்க" என்று கூறினார். அதைக் கேட்டு நான் 'நல்ல பாயிண்ட் இது' என்று கூறினேன். இதை போய் மேடையில் பேசும்போது சொல்லுங்க என்று சொன்னார்கள். இதை தான் நான் மேடையில் பேசினேன்.


ஜாலியாக நடந்தது:


ஆனால் அதை "உடை உடுத்துவது பெண்களின் உரிமை; சுதந்திரம்" என்றது போல் சொல்கிறார்கள். அந்த கருத்து உண்மைதான்… பெண்களும் ஆண்களும் உடை உடுத்துவது அவரவர்களின் சுதந்திரம் தான். நான் பேசிய கருத்து, இரண்டு நண்பர்கள் சாதாரணமாக பேசி கூறிய கருத்துதானே தவிர, வேறு எதுவும் இல்லை. அதுவும் தர்ஷா சொல்லுங்க என்று கூறி சொல்லிய விஷயம் தான். அதை நிறைய பேர் சீரியஸாக எடுத்துக் கொண்டு பொதுவாக அனைவரையும் கூறியது போல் எடுத்துக் கொண்டார்கள். அப்படி கிடையாது. மூடர்கூடம் இயக்குனர் நவீன், பாடகர் சீனிவாஸ், இசை பாடகி சின்மயி என திரைத்துறையில் இருந்தும் சிலர் கமெண்ட்டுகளில் குறிப்பிட்டிருந்தனர். அவர்களுக்கும் நான் சொல்லுகிறேன். "இது ஜாலியாக நடந்ததுதானே தவிர.வேறொன்றுமில்லை." மேலும் சிலர் என்னை செல்போனில் அழைத்து,  இப்படி பேசி நீங்களே காசு கொடுத்து எதிர்ப்பு தெரிவிக்க சொல்லி படத்தை பிரமோட் செய்கிறீர்களா? என்று கேட்டார்கள்..அதெல்லாம் எதுவும் கிடையாது. அவை அனைத்துமே அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் தான். அதை நான் முற்றிலுமாக ஏற்கிறேன்.




 நியாயமான கருத்து தான். ஆனால் இது வேண்டும் என்று சொல்லப்படவில்லை. வேடிக்கையாக பேசப்பட்டது தான். அவர்களின் (தர்ஷா) சம்மதத்துடன் கூறிய ஒன்றுதான்.


நல்ல விஷயங்களையும் பின்பற்றுங்கள்!


இந்த விஷயத்திற்கு இவ்வளவு ரியாக்ட் செய்வதை நான் நேர்மறையாகவே எடுத்துக் கொள்கிறேன். ஆனால் நான் நிறைய நல்ல விஷயங்களையும் பேசி இருக்கிறேன். யாரும் புகைபிடிக்க வேண்டாம், மது அருந்த வேண்டாம் என்று கூறி இருக்கிறேன். இதை பார்ப்பவர்கள் அதையும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கெட்ட விஷயங்களுக்கு ரியாக்ட் செய்வது போல், நல்ல விஷயங்களையும் பின்பற்றினால் ரொம்ப சந்தோசமாக இருக்கும் என்று கூறியுள்ளார் நடிகர் சதீஷ்.