நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின்  அடுத்தப்பட அறிவிப்பு குறித்து அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 


ரேடியோ ஜாக்கியாக  ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் ஆர்.ஜே.பாலாஜி சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் சிறுவேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, வாயை மூடி பேசணும், வடகறி, நானும் ரௌடி தான், தேவி, கடவுள் இருக்கான் குமாரு, கவலை வேண்டாம், ஸ்பைடர் மேன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார். 


தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான அரசியல் காமெடி படமான எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவாக அடுத்த பரிணாமம் எடுத்தார். பின்னர் 2020 ஆம் ஆண்டு நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அப்படத்தில் முதன்மை வேடத்திலும் நடித்திருந்தார். பின்னர் கடந்த ஜூன் மாதம் வெளியான வீட்ல விஷேசம் படத்திலும் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்திருந்தார். நடிப்பில் பெரிய அளவு மாற்றம் இல்லை என்றாலும் அவரின் நகைச்சுவை கலந்து டயலாக் டெலிவரி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 






இதற்கிடையில் கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கி வரும் ஆர்.ஜே.பாலாஜியின் கமெண்டரிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் அவர் கமெண்டரி செய்து வருகிறார். இதனிடையே நேற்றைய தினம் தனது அடுத்த படத்தின் அறிவிப்பு இந்தியா- இங்கிலாந்து இடையேயான அரையிறுதி போட்டியின் போது வெளியாகும் என்றும்,  இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடுவார் என்றும் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார். 


அந்த வகையில் தற்போது அவரின் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது. வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஸ்மோரா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். சிங்கப்பூர் சலூன் என பெயரிடப்பட்ட இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி முடி திருத்தும் தொழிலாளி கெட்டப்பில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடத்தில் வைரலாகியுள்ளது. மேலும் இப்படத்தின் ஹீரோயின், சக நடிகர்கள், இதர டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. கோகுல் தற்போது சிம்புவை வைத்து கொரோனா குமாரு என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.