ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சதீஷின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. 


கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட சன்னி லியோன் தற்போது இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.  அந்த வகையில் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான  ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்த அவர், தற்போது முழு நேர கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவரது நடிப்பில் VAU மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோ  தயாரிப்பில் ஆர்.யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ளஓ மை கோஸ்ட் படம் உருவாகியுள்ளது. 






ஜாவித் ரியாஸ் இசை அமைத்துள்ள இந்த படத்தில் இந்த படத்தில் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு  விழா கடந்த நவம்பர் 2 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் சன்னி லியோன், ஜி.பி.முத்து ஆகியோரின் மேடை பேச்சுக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. 


இந்நிகழ்ச்சியில் நடிகைகளில் சன்னி லியோன் புடவை அணிந்தும், தர்ஷா குப்தா மாடர்ன் உடையிலும் வந்ததை சுட்டிக்காட்டி நடிகர் சதீஷ் பேசினார். அப்போது பம்பாயில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த சன்னி லியோன் எப்படி டிரஸ் பண்ணியிருக்காங்க. கோயம்புத்தூர்ல இருந்து ஒரு பொண்ணு வந்துருக்கு தர்ஷா குப்தா என சொல்லிவிட்டு அவங்க எப்படி நம்ம கலாச்சாரத்துக்கு மாறிட்டாங்கன்னு சொல்ல வந்தேன் என அவர் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 






இதுகுறித்து மூடர்கூடம் இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. சதீஷ் சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நிங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான் என விமர்சித்துள்ளார்.






இதேபோல் பாடகி சின்மயியும் தனது ட்விட்டர் பக்கத்தில், இது  ஒன்றும் வேடிக்கையானது இல்லை. ஆண்களின் இந்த செயல்பாடு எப்போது நிறுத்தப்படும்?   என கேள்வியெழுப்பி நடிகர் சதீஷின் பேச்சை கண்டித்துள்ளார்.