அயோத்தி படம் பார்த்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு சசிகுமார் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
சசிகுமார் நடிப்பில் இயக்குநர் அ.மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று வரும் படம் அயோத்தி. கடந்த மார்ச் 3ஆம் தேதி வெளியாகி இந்தப் படம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி படத்தைப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.
ரஜினிகாந்த் ட்வீட்
“முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. அயோத்தி நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்” என ரஜினிகாந்த் ட்வீட் செய்திருந்தார்.
சசிகுமார் நெகிழ்ச்சி
இந்நிலையில், ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்து சசிகுமார் பதில் ட்வீட் செய்துள்ளார். அதில், "நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது. மிக்க நன்றி சார்" என சசிகுமார் நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் சசிகுமாரும் வேலன் - மாலிக் எனும் நண்பர்களாக நடித்திருந்த நிலையில், நண்பன் எனக்கூறி ரஜினிகாந்த் தற்போது சசிகுமாரை வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏகோபித்த ஆதரவு
நடிகரும் இயக்குநருமான சசிகுமாருடன் யஷ்பால் ஷர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, புகழ் ஆகியோர் அயோத்தி படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். NT ரகுநந்தன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ராமேஸ்வரத்துக்கு அயோத்தியிலிருந்து சுற்றுலா வரும் இந்து குடும்பம் ஒன்று எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது, இஸ்லாமியரான சசிகுமார் தன் நண்பர்களுடன் இணைந்து அக்குடும்பத்துக்கு உதவும் வகையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.
திரையரங்குகளில் வெளியான அயோத்தி திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுகளைப் பெற்று பாராட்டுகளை அள்ளியது. தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் அயோத்தி திரைப்படம் வெளியான நிலையில், தொடர்ந்து இணையத்தில் இந்தப் படம் பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார்.
இதனிடையே அயோத்தி படத்தை இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீ மேக் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியானது. மேலும், இந்தியில் அஜய் தேவ்கன் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகவும், தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த இரண்டு படங்களுக்கும் ‘அயோத்தி யா’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.