அயோத்தி படத்தின் வெற்றியை மக்கள் தங்களுக்கான வெற்றியாக கொண்டாடினார்கள் என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். 


அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அயோத்தி'. தியேட்டர்களில் ரிலீசான இந்த படத்தில் புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி பல பிரபலங்களும் அயோத்தி படத்தை பாராட்டி தள்ளினர். 


இந்த படம் ரிலீசான சமயத்தில் கடும் சர்ச்சையில் சிக்கியது. எழுத்தாளர் நரன், தன்னுடைய வாரணாசி கதை அப்படியே அயோத்தி கதையாக எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து மாதவராஜ் என்ற எழுத்தாளரும் அயோத்தி பட கதை தன்னுடையது என தெரிவித்தார். ஆனால் அயோத்தி படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதனால் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


அதையும் தாண்டி அயோத்தி படம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றதோடு, தொடர் தோல்விகளை பெற்று வந்த நடிகர் சசிகுமாருக்கும் கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. இந்த படம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வரும் மே 1 ஆம் தேதி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. அதேசமயம் கடந்த ஏப்ரல் முதல் வாரம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இதனிடையே அயோத்தி படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது. 


இதில் கலந்து கொண்ட நடிகர் சசிகுமார்,  அயோத்தி படத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் விரைவாக ரிலீஸ் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதால் சரியாக புரொமோஷன் செய்ய முடியவில்லை. இதனால் படம் வந்ததே மக்களுக்கு தெரியவில்லை. அடுத்த சில நாட்களுக்குப் பிறகே பிக்கப் ஆனது என கூறினார். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஷீல்டு வாங்குகிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. 


அதேசமயம் எனக்கு ஒரு சின்ன வருத்தம் இருக்கிறது. மகேந்திரன், பாலுமகேந்திரா இருந்திருந்தால் அவர்களுக்கு இந்த படத்தைப் போட்டு காட்டியிருப்பேன். ரஜினிகாந்த் தொலைபேசியில் அழைத்து பேசியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. சிம்பு வாழ்த்தும் தெரிவித்தார். அவர் தான் சுப்பிரமணியபுரம் படத்தை எடுக்க முடிவு செய்த போது பேசப்பட்ட நடிகர். அவர்களுக்கு என் நன்றி. என் கேரியரில் அயோத்தி படம் மிக முக்கியமான படமாகும். 


இந்த படத்தின் வெற்றியை மக்கள் தங்களின் வெற்றியாக எடுத்துக் கொண்டார்கள். மேலும் இதன்மூலம் அடுத்தடுத்த படங்களும் நான் நல்ல படங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை மக்களாகிய நீங்கள் தெரியப்படுத்தி உள்ளீர்கள். இனி இதுபோன்ற நல்ல படங்களைத் தருவேன் எனவும் அந்நிகழ்ச்சியில் சசிகுமார் கூறியுள்ளார்.