சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு நடிகர் சமுத்திரகனி  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் சுப்ரமணியபுரம். சசிகுமார், ஜெய், கஞ்சா கருப்பு, சமுத்திரகனி, ஸ்வாதி ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் திரைப்படங்களில் க்ளாசிக் படமாக கருதப்படுகிறது. பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் தனது கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் திரைப்படத்தை எடுக்க மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாக தனக்கு சுப்ரமணியபுரம் படம் இருந்தது. படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடிகர் சமுத்திரகனி வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.


“சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகின்றன. நினைத்தாலே வியப்பாக இருக்கிறது. என் தம்பி சசிகுமார் என்னை ஒரு நடிகனாக மாற்றிய படம். என் தம்பி சசிகுமார் ஒரு நடிகனாக உருவான படம் இது. இந்தப் படத்தில் எங்களுடம் பணியாற்றிய அனைவருக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகள் கடந்தும் இந்தப் படத்தின் வீரியம் ஒரு துளிகூட குறையாமல் உங்கள் முன் இருக்கிறது. என் தம்பி சசிகுமார் தற்போது மிகப்பெரிய படம் ஒன்றுக்காக தயாராகி வருகிறார். சுப்ரமணியபுரம் படத்தை விட மிகப்பெரிய படமாக அது இருக்கும் .“ என்று இந்த வீடியோவில் சமுத்திரகனி பேசியிருக்கிறார்.


சசிகுமார்






மேலும் சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சுப்ரமணியபுரம் படம் குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். “ நேற்று நடந்ததுபோல்  இருக்கிறது ஆனால் பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை  அங்கீகரிக்க மட்டுமில்லை அதை கொண்டாடவும் செய்திருக்கிறீர்கள். இந்த மகிழ்ச்சியான நாளில் நான் உங்களுடன் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் என்னுடைய அடுத்த படத்தை இயக்க இருக்கிறேன் “ என்று தனது ரசிகர்களுக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். விரைவில் இந்தப் படம் குறித்தான கூடுதல் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.