கடந்த ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின், வாள் சண்டை பிரிவில் கலந்துக்கொண்டவர் பவானி தேவி. இந்தியாவில் இருந்து முதன் முதலில் ஒலிம்பிக் வாள் சண்டை பிரிவில் கலந்துக்கொண்ட தமிழக வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரி. டோக்கியோவில் தனிநபர் வாள்சண்டை சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியா நாட்டை சேர்ந்த வீரங்கனையுடன் மோதி வெற்றிப்பெற்றார். முதல் சுற்றில் வெற்றியை பதித்த பவானி தேவி, இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனையுடன் மோதி தோல்வியை தழுவினார். பதக்க வாய்ப்பை தவற விட்டாலும்  இந்திய மக்கள் மனதில் இடம்பிடித்தார். இந்திய மக்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் பவானி தேவியை வாழ்த்திய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சசிகுமார் பவானி தேவியை நேரில் வாழ்த்தி, தங்க சங்கிலி ஒன்றையும் பரிசளித்துள்ளார். மேலும் அடுத்த முறை நிச்சயம் வெல்லலாம் தொடர்ந்து போராடுங்கள் என ஊக்கமளித்துள்ளார் சசிகுமார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.




இது குறித்து இயக்குநர் இரா.சரவணன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதில் “வென்றால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவோம்; தோற்றால், பார்க்கக்கூட மாட்டோம். எல்லோர் இயல்பும் இதுதான் என்றாலும், நல்லோர் இயல்பு வேறல்லவா? ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியை வீடுதேடிப்போய் சந்தித்து, தங்க செயின் பரிசளித்து, “விடாமுயற்சியுடன் போராடு... அடுத்த முறை வெல்லலாம்” என நம்பிக்கை கொடுத்திருக்கிறார் நடிகர் சசிகுமார். நன்றி உடன்பிறப்பே...” என குறிப்பிட்டுள்ளார். சசிகுமார் தற்போது இரா.சரவணன் இயக்கத்தில், ஜோதிகாவுடன் உடன்பிறப்பே என்னும் படத்தில் நடித்து வருகிறார். அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. படத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு சொந்தமான 2டி எண்டர்டைன்மெண்ட் தயாரித்து வருகிறது. இந்த படம் அடுத்த மாதம் ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. 




சசிகுமார் நடிப்பில்  வெளியான வெளியான சுந்தரபாண்டியன், போராளி,  தாரை தப்பட்டை, வெற்றிவேல் உள்ளிட்ட படங்களை நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவாவின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.இந்த படத்தில் ஹரிப்பிரியா சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகுமாரி நடிப்பில் எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது