நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி இன்றைய தலைமுறையினரும் கொண்டாடும் வகையில் அமைந்த “சூர்யவம்சம்” படம் வெளியாகி இன்றோடு 27 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


தமிழ் சினிமாவில் குடும்ப படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குநர் விக்ரமன். இவர் 1997 ஆம் ஆண்டு சரத்குமாரை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து “சூர்யவம்சம்” என்ற படத்தை எடுத்தார். சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன், ஆர். சுந்தர்ராஜன், மணிவண்ணன், ஜெய்கணேஷ், சத்தியப்பிரியா என பலரும் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த இந்த படம் எவர்க்ரீன் ஹிட் ஆக அமைந்தது. 


இந்த படம் வெளியாகி இன்றோடு 27 ஆண்டுகள் நிறைவடைகிறது. ரோசாப்பூ, நட்சத்திர ஜன்னலில் என அனைத்து பாடல்களும் இன்றளவும் மக்களின் பேவரைட் ஆக உள்ளது. இந்நிலையில் இப்படம் பற்றி இயக்குநர் விக்ரமன் நேர்காணல் ஒன்றில் சில தகவல்களை தெரிவித்திருந்தார். 


அதில், “சூர்யவம்சம் படம் தலைமுறைகள் தாண்டியும் ஜெயித்துள்ளதால் படைப்பாளியாக எனக்கு பெருமை தான். நான் உதவி இயக்குநராக இருக்கும்போது சூர்யவம்சம் படத்தின் கதையை தயார் செய்தேன். அப்பா கேரக்டரில் விஜயகுமார், மகன் கேரக்டரில் கார்த்திக் மனதில் வைத்து தான் படம் தயாரித்தேன். 






சூர்யவம்சம் படத்தின் கதை விவாதம் நடத்தபோன இடத்தில் உருவானது தான் வானத்தைப்போல படம். நான் ஆர்.பி.சௌத்ரியிடம் கதை சொன்னால் இதற்கு சரத்குமார் சரியாக இருப்பார் என சொன்னார். ஆனால் நான் அண்ணன் கேரக்டரில் ஜனகராஜை வைத்து சொன்னேன். நான் சரத்குமாரை வைத்து கதை சொன்னால் அவர் அண்ணன், தம்பி கேரக்டரை நானே பண்ணுகிறேன் என சொன்னால் எனக்கு உடன்பாடில்லை. 


பின்னர் தான் அப்பா, பையன் கதையை ஆர்.பி.சௌத்ரியிடன் சொன்னேன். மீண்டும் சரத்குமாரிடம் கதை சொல்ல, அவர் டபுள் ஆக்‌ஷன் பண்ணுவதில் உறுதியாக இருந்தார். சரத்குமார் சரியாக பெர்பார்மன்ஸ் பண்ணினார். ஏன் படம் ஓடுகிறது என தெரியாமல் சூர்யவம்சம் செம ஹிட்டானது. இந்த படத்தில் ரோசாப்பூ பாடலை 3 இடங்களில் வைக்க என்னை தவிர யாருக்குமே சம்மதம் இல்லை. இந்த படத்தை சாதாரண படம், கதை என எல்லாரும் நினைத்தார்கள். நான் மட்டுமே முழுதாக நம்பினேன்” என விக்ரமன் தெரிவித்திருப்பார்.