ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அந்த வாய்ப்பு தான் விஜயகாந்துடன் நட்பை தொடர வைத்தது என நேர்காணல் ஒன்றில் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். 


நடிகரும், தேமுதிக தலைவரும் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு பலருக்கும் பெரிதும் நீங்கா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய சரத்குமார், விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார். 


நல்ல நண்பர் விஜயகாந்த் 


அதில் பேசிய அவர், “விஜயகாந்த் தான் சினிமாவில் என் உற்ற நண்பர். அவர் ஒரு சிறந்த மனிதர். எங்களுக்கு போட்டி, பொறாமை எதுவும் இருந்ததில்லை. எனக்கு முதன்முதலில் வாய்ப்பு கொடுத்தது விஜயகாந்த தான். நான் புலன் விசாரணை படத்துக்காக அவரது ஆபீஸ்க்கு போயிருந்தேன். அந்த படத்தின் கிளைமேக்ஸ் சீனில் நான் விஜயகாந்தை போட்டு அடி அடி என அடிப்பேன். நான் மாஸ்டரிடம் எப்படி அடிக்க முடியும்? என கேட்டேன். ஆனால், அப்படித்தான் அடிக்கணும். வில்லன் ஸ்ட்ராங்கா இருந்ததால் ஹீரோ அடிக்கும்போது நல்லா இருக்கும்ன்னு சொன்னார். படம் பார்த்து விட்டு என்கிட்ட வந்து உனக்கு தான் நல்ல பேரு கிடைக்கும் என சொன்னார். பின் என்னை வைத்து ஒரு படம் தயாரித்தார். 


அவருடன் நடிகர் சங்கத்துடன் பயணித்திருக்கிறேன். கோபமுள்ள மனிதர் தான், அவரின் பாணியே தனி தான். ஒரு 3, 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் உடல்நிலை சரியில்லாதபோது போய் பார்த்தேன். விஜயகாந்துக்கு 40வது ஆண்டு கலை விழா நடந்தது. அப்போது அரசியலில் இருவரும் எதிரும் புதிருமாக இருந்தோம். ஆனால் அந்நிகழ்ச்சிக்கு நான் போனேன். நட்பு என்ற ஒன்று இருந்ததால் அரசியல் ரீதியாக சட்டமன்றத்தில் பேசிய எதுவும் அங்கு கூடியிருந்த அவர் ரசிகர்கள் மத்தியில் எதிரொலிக்கவே இல்லை. உடல்நிலை பற்றி எனக்கு கவலை இருந்தது. பார்க்க முயற்சி செய்தும் முடியவில்லை. 


ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் இல்லையா? அந்த உறவு தான் விஜயகாந்துடன் தொடர்ந்து இருந்தது. நாங்கள் நடிகர் சங்கத்தில் இருந்த நேரம் பொற்காலம் தான். நான் அவரை அன்போடு விஜி சார் என அழைப்பேன். கேப்டன் பிரபாகரன் படம் நடிக்கும்போது மற்றொரு படத்தில் நடித்ததால் கழுத்தில் அடிபட்டது. 6 மாதம் ஓய்வில் இருந்தேன். ஆனால் நான் வந்து நடித்த பின் படம் வெளியானால் போதும் என உறுதியாக இருந்தார்” என சரத்குமார் கூறினார். 


விஜயகாந்த் - வடிவேலு பிரச்சினை 


தொடர்ந்து வடிவேலு பற்றி பேசிய அவர், “சில நேரங்களில் நாம் தவறு பண்ணலாம். விஜயகாந்த் - வடிவேலுவுடன் ஏதோ ஒரு வகையில பிரச்சினை வந்திருக்கலாம். விஜயகாந்த் கூட அதனை பெரிதாக எடுத்திருக்க மாட்டார். அரசியல் களத்தில் வடிவேலு பேசியது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. இதெல்லாம் பெரிய அளவில் இருவருக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளது. உண்மையிலேயே வடிவேலு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த போகலாம், போனால் என்ன நடக்கும் என நினைத்திருக்கலாம். வீட்டில் உட்கார்ந்து கூட வடிவேலு அழுதிருக்கலாம். அவரும் ஒரு மனிதர் தான்” என தெரிவித்தார்.