நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் காமெடியால் இன்றளவும் நினைவு கூறப்படும் ‘மாயி’ படம் 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
சூர்யா பிரகாஷ் எழுதி இயக்கிய இந்த படம் 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியானது. சரத்குமார்,மீனா, வடிவேலு , விஜயகுமார், சபிதா ஆனந்த் , சுவலட்சுமி , ராஜன் பி. தேவ் மற்றும் ஆனந்த் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இந்தப் படம் தெலுங்கில் சிம்ஹாரசி என்ற பெயரிலும், கன்னடத்தில் நரசிம்ஹா என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.
படத்தின் கதை
கிராமத்தில் நன்மதிப்பைப் பெற்ற மனிதராக வலம் வரும் சரத்குமார் அங்குள்ள பெண்களை தனது சகோதரிகளாக கருதி திருமணங்களை நடத்த நிதி உதவி செய்கிறார். இதனிடையே அரசியல் பழிவாங்கலில் சரத்குமாரின் தங்கை சுவலட்சிமியை திருமணம் செய்யும் ஆனந்த், அவரை கொடுமைப்படுத்துகிறார். மேலும் வெளியூரில் இருந்து வரும் மீனா சரத்தை முதலில் தவறாக நினைக்கிறார். பின்னர் அவரின் நல்ல உள்ளம் புரிந்து கொண்டு காதல் கொண்டு திருமணம் செய்ய நினைக்கிறார். ஆனால் தன் தாயால் கூட தீண்டப்படாத தனது உடலை எந்தப் பெண்ணும் தொடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்கு காரணம் என்ன பிளாஸ்பேக் காட்சிகளாக விரிகிறது. இதன்பிறகு இருவரும் சேர்ந்தார்களாக என்பதே இப்படத்தின் கதையாகும்.
வடிவேலுவின் வெடி சிரிப்பு காமெடி
உண்மையில் மாயி படம் இன்றளவும் நினைவுக்கூரப்பட காரணம் வடிவேலுவின் காமெடி காட்சிகளால் மட்டும் தான் என்றே சொல்லலாம். ‛அண்ணேன் மாயி அண்ணே வந்துருகாக... மாப்புள மொக்கச்சாமி வந்திருக்காக... வாம்மா மின்னல்...’ என்கிற வசனத்தை தொடங்கும் அவரது காமெடி, மைனர் வேடத்தில் வடிவேலு செய்யும் அட்ராசிட்டிகளும், ராக்காயி ஆக வரும் கோவை சரளாவிடம் வாங்கி கட்டுவதாகட்டும் என படம் முழுக்க சிரிப்பு சரவெடிகளை கொளுத்தியிருப்பார்.
அதேபோல் எப்போதும் துறுதுறுவென கேரக்டரில் வலம் வரும் நடிகர் சரத்குமார் இந்த படத்தில் மிகவும் அமைதியான, வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். படத்திற்கு பெரும் பலமாக எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் நிலவே வான் நிலவே, ஓலை குடிசையிலே, மேகம் உடைத்து உள்ளிட்ட பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றதாக அமைந்தது. 2000 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தில் இடம் பெற்ற வடிவேலுவின் காமெடி இன்னும் 100 ஆண்டுகளுக்கு நினைவுக்கூறப்படும் என்றால், கண்டிப்பாக மாயி படம் ரசிகர்களின் மனதில் தனி இடம் போட்டு என்றென்றும் நிலைத்திருக்கும்.