உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் பொதுமக்களுக்கும், நடிகர்களுக்கும் செயலால் பாடமெடுப்பவர் சரத்குமார். 69 ஆகிடுச்சா என கேட்குமளவுக்கு உடல் நலன் பேணுதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்
90 காலகட்டங்களில் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திழ்ந்தவர் நடிகர் சரத்குமார். இவர் நடித்த ஐயா, விண்ணுக்கும் மண்ணுக்கும், சமுத்திரம், பாட்டாளி, நட்புக்காக, சூர்ய வம்சம், நாட்டாமை, ஊர் மரியாதை, சேரன் பாண்டியன், கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.
இவர் நடிப்பில் 1998-ஆம் ஆண்டு வெளியான நட்புக்காக திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். நண்பர்களாக வரும் சரத்குமாருக்கும்- விஜயகுமாருக்கும் இடையேயான காட்சிகள் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும். இப்படத்தில் நட்புக்காக சரத்குமார்,தனது உயிரையே தியாகம் செய்யும் போது, நண்பன் உயிரை விட்ட அடுத்த கணமே நடிகர் விஜயகுமார் உயிரை விடும் காட்சிக்கு, திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்கள் குளமாகி இருக்கும்.
1983ஆம் ஆண்டு இவரின் நடிப்பில் வெளியான சூர்யசம்சம் திரைப்படத்தை இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்தாலும் அதை பார்த்து ரசிப்பதற்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு என்றால் அது மிகை ஆகாது. நட்சத்திர ஜன்னலில் எனும் ஒற்றை பாடலில் ஹீரோ பணக்காரராகும் கான்செப்டை எல்லாம் எப்படி மறக்க முடியும். இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தை பார்த்து பேருந்து வாங்கி சுய தொழில் ஆரம்பித்தவர்கள் கூட இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்டுத்திய திரைப்படம். இப்படத்திலும் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார்.
1994-ஆம் ஆண்டு வெளியான நாட்டாமை திரைப்படம் சரத்குமாருக்கு மிகப்பெரிய பெயரை தேடி தந்தது. இந்த படத்தில் சரத்குமார் அண்ணன் - தம்பி என இரு வேடங்களில் நடித்திருப்பார்.தம்பி தவறு செய்ததால், நாட்டாமையான அண்ணன் சரத்குமார், அவருக்கு பெரிய தண்டனை கொடுப்பார்.வில்லனின் சதியால் அவர் தவறான தண்டனை கொடுத்திருப்பார். தான் தவறான தீர்ப்பு கொடுத்தது தெரிய வரும் தருணத்தில் மனம் உடைந்து அங்கேயே உயிர் துறப்பார் நாட்டாமை சரத்குமார். இந்த படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றது. இந்த திரைபடத்தில் இடம்பெற்ற செந்தில்- கவுண்டர் மணி காமெடிகளும் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
சரத்குமாரின் நடிப்பில் வெளிவந்த சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, விண்ணுக்கும் மண்ணுக்கும் பாட்டாளி, ஐயா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் அவரின் திரை பயணத்தில் மட்டும் அல்ல தமிழ் சினிமாவிலும் முக்கிய திரைப்படங்களாகவே பார்க்கப்படுகின்றன. இப்படி தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பு திறன் மூலம், தனக்கென தனி இடத்தை பிடித்து, உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் சரத்குமாரை அவரின் பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறது ஏபிபி நாடு.