150 வயது வரையில் உயிருடன் வாழ்வதற்கான வித்தை பற்றி பேசிய விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை நடிகர் சரத்குமார் விளக்கியுள்ளார்.
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த விளக்க பொதுக்கூட்டம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய சரத்குமார், எனக்கு தற்போது 69 வயதாகிறது. இன்னும் 150 வயது வரையில் உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன். அதனை 2026 ஆண்டு என்னை முதலமைச்சராக்கினால் சொல்வேன் என கூறினார்.
இதன் வீடியோ இணையத்தில் வைரலானதோடு பெரும் விவாத பொருளாகவும் மாறியது. இதனிடையே அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள போர் தொழில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்நிகழ்வில் கலந்து கொள்ள வந்த சரத்குமார், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், 150 வயது வரையில் உயிருடன் வாழ்வதற்கான வித்தை பற்றி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஒரு மீட்டிங்கில் பேசும் போது, அங்கிருப்பவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கும் போது, அந்த இடத்தை கலகலப்பாக மாற்ற என் நண்பன் என்னுடைய வயதை சொன்னான். அதற்காக சொல்லப்பட்டது தான் 150 வயது வரை வாழ்வேன் என்பது. அது செய்தியாக வந்தபோது எனக்கே ஆச்சரியமாகவே இருந்தது. நான் அந்த மீட்டிங்கில் ஒரு உந்துதல் ஏற்படுத்த வேண்டும் என அப்படி செய்தேன்.
அதாவது 150 வயது வரை யாராலும் வாழ முடியுமா?. ஒரு கட்சியின் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். எனக்கும் இருக்கும். நான் ஏன் பொய் சொல்லணும். நான் முயற்சி செய்ய தான் செய்வேன். இது ஒரு போட்டி தானே” என கூறினார். அப்போது விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என சரத்குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர்களை கைது செய்து கொண்டு சென்றது தவறு தான். நாட்டுக்காக பதக்கம் வாங்கிக் கொடுத்த வீரர்களை அப்படி செய்திருக்க வேண்டாம்’ என சரத்குமார் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Sarath kumar: ‘இன்னும் 150 வயது வரை உயிர் வாழ்வேன்’...அந்த வித்தை உங்களுக்கு தெரிஞ்சிக்கனுமா? இதை செய்யுங்க - சரத்குமார்