தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய பிராந்திய மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் சரண் ராஜ். 90 களில் வில்லன் , குணச்சித்திர கதாபாத்திரம் என பல ரோல்களில் நடித்து அசத்திய சரண் , சில படங்களை தயாரித்து இருக்கிறார். சில படங்களை இயக்கி , திரைக்கதையும் எழுதியிருக்கிறார். இதுவரையில் இவர் நடித்த படங்கள் 500க்கு மேல் இருக்கும் . 90களில் டாப் நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்களுடன் இவர் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலம். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட சரண் ராஜ் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்துக்கொண்டார்.
அதில் “ ஒரு விழா சமயத்தில் நான் மேடையில் ஏறி கிட்டார் வாசித்து நடனமாடினேன். அப்போது ஒரு நண்பர் மேடையில்l பார்க்க ஹேண்ட்சமாக இருக்கிறாய் , சினிமா நடிகனாகலாம் என்றார். குரு என்னும் மற்றொரு நண்பர் இவனா , பார்க்க குரங்கு மாதிரியே இருக்கான் என சிரித்தார். அன்றைக்கு சொன்னேன் நான் நடிகனாகி காட்டுகிறேன் என்று அப்படித்தான் நான் நடிக்க வந்தேன். ஷங்கர் சாருடன் பணியாற்றியிருக்கிறேன். அவரின் ஆரம்ப காலக்கட்டத்தில் அவருக்கு சினிமா மீது அவ்வளவு ஆர்வம். சட்டை , பேண்ட் கிழிந்திருந்தாலும் கண்டுக்கொள்ள மாட்டார். அவர் ஒரு சினிமா பேய். பணக்காரன் படத்துல நடிக்கும் பொழுது, நூறு வருஷம் பாட்டுக்காக லேடி கெட்டப் போட்டு வந்தாரு ரஜினிகாந்த். அப்போ நான் பார்த்தேன். அவர் கிட்ட போயிட்டு , சூப்பரா இருக்கீங்க என சொன்னேன். உடனே அவர் போடா போடா என என்னை துரத்தினாரு. அவர் செட்ல ரொம்ப ஜாலியா நடிப்பார்.
பாட்ஷா படத்துல நான் பண்ணிய அன்வர் கேரக்டர் மம்முட்டி சார்தான் பண்ண வேண்டியது. ஆனால் ரஜினிசார்தான் நான் பண்ணினால் நல்லா இருக்கும் என பரிந்துரை செய்தார். முன்னதாக ரஜினிசார் தளபதி படத்துல மம்முட்டியுடன் நடிச்சிட்டதால , அந்த கேரக்டர்ல என்னை நடிக்க வச்சாங்க. என்னடா படத்துல நடிக்கும் பொழுது கொஞ்ச சீன்லதான் நடிக்கிறோம்னு ஃபீல் ஆச்சு. ஆனால் படம் வெளியான பிறகு என் கேரக்டர் எங்கயோ போச்சு. அதே போல மார்க் ஆண்டனி கேரக்டர்ல நடிச்ச நம்ம ரகுவரன் என்னுடைய நல்ல நண்பர் . அவரை தவிர அந்த கேரக்டர் யாராலும் பண்ணியிருக்க முடியாது. ரகுவரன் நடித்த எல்லா படங்கள்லையுமே அவரை போல நடிக்கிறது ரொம்ப கஷ்டம். அந்த தோற்றம் முதல் டயலாக் வரை எல்லாமே மாற்றம் கொண்டு வருவார் “ என தனது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் சரண் ராஜ்