நான் சினிமாவுக்கு வந்தது காரணம் சிலம்பரசன் தான் என நேர்காணல் ஒன்றில் நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். 


சந்தானம்:


சின்னத்திரையில் லொள்ளுசபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சந்தானம், சிம்பு நடித்த மன்மதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். 


தற்போது அவர் நடிப்பில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், ஃபெசி விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின்  ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


சிம்புதான் காரணம்:


அதன் ஒரு பகுதியாக நடிகர் சந்தானம் பல நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அதில் ஒரு நேர்காணலில், நடிகர் சிம்புவுக்கு  தனக்கும் இடையேயான நட்பை பற்றி பேசியுள்ளார். அவர் தனது உரையில், “நான் சினிமாவுக்கு வந்தது காரணம் சிலம்பரசன் தான். அவர் தான் டிவியில் இருக்கிற என்னை மன்மதன் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் கவுண்டமணியும் இருந்தார். அதன்பிறகு எஸ்.ஜே. நடித்த அன்பே ஆருயிரே படத்திலும் சிம்பு தான் பரிந்துரை செய்தார். 


அதில் இருக்கு ஆனா இல்ல என்ற அந்த காமெடி நன்றாக ஒர்க் அவுட்டாகி இருந்தது. தொடர்ந்து வல்லவன் என அடுத்தடுத்து சிம்புவின் படங்களில் நடித்து வந்தேன். வானம் என்ற படத்தில் நானும் சிம்புவும் இணைந்து நடித்தோம். அந்த நேரத்தில் தேதி கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்தேன். எனக்காக நைட் ஷூட் போட்டு நான் எப்பவெல்லாம் மத்த படத்தோட ஷூட் முடிச்சிட்டு சும்மா இருக்கேனோ ஏவிஎம் ஸ்டூடியோல எடுப்பாங்க. பின்னர் ஹைதராபாத் கூட்டிச் சென்று எடுத்தாங்க.


ஆன்மீகம்:


நான் ஹீரோ ஆன அப்புறம் கூட, நீ ஒருபக்கம் எங்க கூட படம் பண்ணலாம் என சொல்லுவார். முன்னாடில்லாம் மீட் பண்ணா படத்தை பற்றி பேசுவோம். ஆனால் இப்பவெல்லாம் ஆன்மீகம் பற்றி தான் பேசுகிறோம். சிம்புவுக்கு ஆரம்பத்தில் இருந்து கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் சித்தர்கள், சாமியார்களை சந்திப்பது, திருவண்ணாமலை போவது என மாறுவார் என நினைத்து கூட பார்க்கவில்லை. தன் படங்களில் சிவன் உள்ளிட்ட விஷயங்களை இடம் பெற செய்கிறார். 


ஆனால் சிம்புவுக்கு முன்னால் எனக்கு ஆன்மீகம் மீது ஈடுபாடு உண்டு. அதற்கு காரணம் ரஜினி தான். அதனால் நாங்கள் இருவரும் ஆன்மீகம் பற்றி பேசுவோம். சிம்புவே தன்னை குருவாக ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார். நான் ஈஷா யோகா சத்குருவை குருவாக ஏற்றுக் கொண்டுள்ளேன்” என சந்தானம் கூறியுள்ளார்.