வாங்குன கடனுக்காக படம் பண்ணியிருப்பதாகவும், அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் “இங்கு நான் தான் கிங்கு” படம் இருக்கும் எனவும் நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியில் பட்டையை கிளப்பியவர் சந்தானம். சின்னத்திரையில் இருந்து வந்தாலும் பெரிய திரையில் தனக்கென தனியிடம் பிடித்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஹீரோவாகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி மாதம் சந்தானம் நடிப்பில் “வடக்குப்பட்டி ராமசாமி” படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 






இதனைத் தொடர்ந்து “இங்கு நான் தான் கிங்கு” என்ற படத்தில் நடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புசெழியன் தயாரிப்பில் ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரயாலயா, தம்பி ராமையா, பால சரவணன், லொள்ளு சபா ஷேசு, லொள்ளு சபா மாறன், விவேக் பிரசன்னா என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படம் இன்று (மே 17) தியேட்டரில் வெளியாகியுள்ளது. முன்னதாக இங்கு நான் தான் கிங்கு படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. 






இப்படியான நிலையில் இங்கு நான் தான் கிங்கு படத்தின் பத்திரிக்கையாளர் சிறப்பு காட்சி நேற்று நடைபெற்றது. இதில் வருகை தந்த சந்தானம் படம் பற்றி சில வார்த்தைகள் பேசினார். அதாவது, “நான் நடிக்கிற வேலை இல்லையென்றால் பத்திரிக்கையாளர் பணிக்கு தான் வந்திருப்பேன். இந்த ஒரு வேலை தான் எப்போதும் பிஸியாக இருக்கிறது என கலகலப்பாக பேசினார். கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணிட்டு போனீங்க. அதேமாதிரி இங்க நான் தான் கிங்கு படமும் சூப்பராகவும், ஜாலியாகவும் இருக்கும். கடன் வாங்கக்கூடாது என இந்த படத்தின் கதை இருக்கும். ஆனால் வாங்குன கடனுக்காக இந்த படம் பண்ணியிருக்கேன். இந்த படத்தை எல்லாரும் பாருங்க” என கேட்டுக்கொண்டார். 




மேலும் படிக்க: Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா? - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!