நடிகர் சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி (Vadakkupatti Ramasamy) படமானது ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


வடக்குப்பட்டி ராமசாமி


டிக்கிலோனா படத்துக்குப்பின் நடிகர் சந்தானத்தை வைத்து 2வது முறையாக கார்த்திக் யோகி இயக்கிய படம் “வடக்குப்பட்டி ராமசாமி”. பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரித்த இப்படத்தில் மேகா ஆகாஷ்  ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் இயக்குநர் தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் என ஏகப்பட்ட காமெடி நட்சத்திரங்களும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்த இப்படம் கடந்த பிப்ரவரி 2 ஆம்  தேதி தியேட்டர்களில் வெளியானது. 


சர்ச்சையை கிளப்பிய வசனம்


கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் ட்ரெய்லர் வெளியானது. அதில்  ”சாமியே இல்லனு ஊருக்குள்ள சுத்திட்டு இருந்தியே அந்த ராமசாமி தான நீ? என்ற வசனம் இடம் பெற்றிருந்தது. இது தந்தை பெரியாரை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதே வசனத்தைப் பேசி மீண்டும் ரீல்ஸ் வீடியோ ஒன்றை சந்தானம் வெளியிட பலரும் கண்டனம் தெரிவிக்க தொடங்கினர்.






பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சந்தானம், ‘ வடக்குப்பட்டி ராமசாமி படம் பற்றி நிறைய சர்ச்சைகள் வருது. அந்த மாதிரி எல்லாம் படத்தில் எதுவும் கிடையாது.இது ஒரு ஜாலியான படம். நான் சினிமாவுக்கு வந்தது மக்களாகிய உங்களை சிரிக்க வைக்கத்தான். இதைத்தவிர யார் மனசையும் புண்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல’ என விளக்கம் கொடுக்க சர்ச்சைகளுக்கு முடிவு எழுதப்பட்டது. 


ஓடிடியில் ரீலீஸ் 


இந்நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அதுவும் ஒரே நேரத்தில் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் இப்படம் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனத்தை சந்தித்தபோது சில காமெடி காட்சிகள் நன்றாகவே ஒர்க் ஆகியிருந்ததாக பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர். 


இதனிடையே வடக்குப்பட்டி ராமசாமி படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் இங்க நான் தான் கிங்கு என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை ஆனந்த நாராயணன் இயக்க டி.இமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Rebel Trailer: தமிழனாக பிறந்தால் தப்பா?.. கேரளாவில் மல்லுகட்டும் ஜி.வி.பிரகாஷ்.. ரிபெல் ட்ரெய்லர் ஓர் பார்வை!