வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் யார் மனதையும் புண்படுத்தும்படி காட்சிகள் இல்லை என நடிகர் சந்தானம் விளக்கமளித்துள்ளார். 


பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரித்துள்ள படம் “வடக்குப்பட்டி ராமசாமி”. டிக்கிலோனா படத்துக்குப்பின் நடிகர் சந்தானத்தை வைத்து 2வது முறையாக கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கியுள்ளார்.  மேகா ஆகாஷ்  ஹீரோயினாக நடிக்கும் நிலையில் இயக்குநர் தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படம் பிப்ரவரி 2 ஆம்  தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இப்படியான நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. முன்னதாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் தந்தை பெரியார் பற்றி வசனம் இருந்ததாக பிரச்சினை எழுந்தது. அதுகுறித்து இந்த நிகழ்ச்சியில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். இதில் பேசிய சந்தானம், “டிக்கிலோனா படம் முடிஞ்ச அப்புறம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ஒன்லைனை சொன்னார். இதை கண்டிப்பாக காமெடி கதையாக, திரைக்கதையாக, இத்தனை காமெடி நடிகர்களை பண்ணுவது சவாலான விஷயம். கண்டிப்பாக பண்ணமாட்டார் என நினைச்சேன். ஆனால் கார்த்திக் யோகி கதை எழுதிட்டு வந்து சொன்னார். ரொம்ப பிடிச்சி இருந்தது. 


டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு எனக்கு மீண்டும் ஒரு ஹிட் தேவைப்படுது. அது வடக்குப்பட்டி ராமசாமியாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என்கிட்ட ரசிகர்கள் எதிர்பார்ப்பது இப்படத்தில் இருக்கும். நாங்கள் இருவரும் முதலில் இணைந்து பணியாற்றிய டிக்கிலோனா படம் தியேட்டரில் வரவில்லை. வடக்குப்பட்டி ராமசாமி தியேட்டரில் வருது. கண்டிப்பாக கலகலப்பான ஒன்றாக இப்படம் அமையும். 


மேலும் இப்படத்தில் நிறைய சர்ச்சைகள் வருது. அந்த மாதிரி எல்லாம் படத்தில் எதுவும் கிடையாது. இது ஒரு ஜாலியான படம். வடக்குப்பட்டி ராமசாமி என்ற ஒருவரோட கதை தான் இப்படம். இதில் ராமசாமி என்ற பெயர் எப்படி வந்தது என்றால், கார்த்திக் யோகி கவுண்டமணியின் தீவிர ரசிகர். நானும் அவருடைய ஃபேன் தான். எங்களுடைய முந்தைய படமான டிக்கிலோனா கூட கவுண்டமணியின் டயலாக் தான். நானும் ஆர்யாவும் அடுத்து நடிக்கவுள்ள படத்துக்கும் கவுண்டமணியின் வசனத்தை தான் டைட்டிலாக பதிவு செய்து வைத்திருக்கிறார் கார்த்தி. 


நான் சினிமாவுக்கு வந்தது மக்களாகிய உங்களை சிரிக்க வைக்கத்தான். இதைத்தவிர யார் மனசையும் புண்படுத்த வேண்டும் என்பது என் எண்ணமில்லை என்பது என்னை கும்பிடுற கடவுள், நேசிக்கிற ரசிகர்களுக்கு தெரியும். காமெடியான இருக்கும் போது பணம்,புகழ் எல்லாம் பார்த்தாச்சு, புதுசா எதாவது பண்ண வேண்டும் என்பதற்காக தான் பெட்டராக யோசிக்கிறேன். எல்லாரும் சிரிக்கணும், சந்தோசமா இருக்கணும்ன்னு நினைக்கேன்” என தெரிவித்துள்ளார்.